இந்திய குடிமக்களின் அரசு அங்கீகார அடையாளச் சின்னமாக ஆதார் அட்டை திகழ்கிறது. சுமார் 15 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருக்கும் இந்த அடையாள அட்டையை புதுப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான காலக்கெடுவாக செப்டம்பர் 14ஆம் தேதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நிர்ணயம் செய்துள்ளது. கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் புதுப்பிக்கவில்லை என்றால், அதன்பின்னர் ரூ.50 அபராதம் செலுத்தி அப்டேட் செய்ய வேண்டும். 2015ஆம் ஆண்டிற்கு முன்னதாக ஆதார் அட்டை பெற்றவர்களுக்கு இந்த புதுப்பிப்புப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் ஆதார் அட்டையைப் புதுப்பிக்கலாமா?
இந்திய தனித்துவ அடையாள ஆணைய தரவுகளின்படி, நம் ஆதார் எண்ணுடன், மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் ஆன்லைன் வழியாக ஆதார் அட்டையைப் புதுப்பிக்கலாம். இல்லையென்றால் அருகில் உள்ள இ-சேவை மையம், அஞ்சல் அலுவலகங்களை நேரில் தொடர்புகொண்டு, தேவையான ஆவணங்களை சமர்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.
புதுப்பிக்கப்படாவிட்டால் ஆதார் அட்டை செல்லாததாகிவிடுமா?
கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் புதுப்பிக்கப்படாவிட்டால் ஆதார் அட்டை பயனற்றதாகிவிடும் அல்லது செல்லாததாகிவிடும் என்று வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். நாம் ஆதார் அட்டை 10 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருந்தாலும் எப்போதும்போல அது செயல்படும். மேலும், அடையாள நோக்கங்களுக்காக வழக்கம் போல் அதைப் பயன்படுத்தப்படலாம். செப்டம்பர் 14 காலக்கெடுவிற்குள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்றால், அதன்பிறகு 50 ரூபாய் செலுத்தி புதுப்பிக்க வேண்டும். இந்த அபராதத் தொகை மட்டும் சேர்க்கப்படுமேத் தவிர, இதனால் வேறு எந்தவொரு ஆதார் தொடர்பான செயல்பாடுகளும் நிறுத்திவைக்கப்படாது.
ஆதார் அட்டையை ஆன்லைனில் எவ்வாறு புதுப்பிப்பது?
- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திற்குள் (myaadhaar.uidai.gov.in) சென்று, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- உள்நுழைந்ததும், உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து, "ஆதார் புதுப்பிப்பு" விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- உங்கள் சுயவிவர பக்கத்தில் (Profile page) காட்டப்பட்டுள்ள அடையாளம் மற்றும் முகவரி விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.
- அனைத்து தகவல்களும் சரியாக இருந்தால், "மேலே உள்ள விவரங்கள் சரியானவை என்பதை நான் ஏற்கிறேன்" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- கீழ்தோன்றும் மெனுக்களில் இருந்து அடையாளம் மற்றும் முகவரி சரிபார்ப்பிற்காக நீங்கள் சமர்ப்பிக்க விரும்பும் ஆவணங்களைத் தேர்வு செய்யவும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- ஒவ்வொரு கோப்பும் 2 MB அளவுக்கும் குறைவானது மற்றும் JPEG, PNG அல்லது PDF என ஏதேனும் ஒன்றாக இருப்பதை உறுதிசெய்யவும்.
- உங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க, நீங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் மதிப்பாய்வு செய்த பின்னர், உங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
- இதனைத் தொடர்ந்து கிடைக்கும் 14 இலக்க புதுப்பிப்பு கோரிக்கை எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் விண்ணப்பத்தின் நிலையைக் கண்காணிக்கவும்.