சென்னை: 'இன்வென்டிவ் (IInvenTiv) 2025' என்ற இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கண்காட்சி, சென்னை ஐஐடியில் பிப்ரவரி 28 முதல் மார்ச் 1 ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொழில்நுட்ப கண்காட்சியை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் துவக்கி வைக்கிறார்.
மத்திய கல்வி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் என்ஐஆர்எஃப் தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஐஐடி-கல்வி நிறுவனங்கள், என்ஐடி-க்கள், ஐஐஎஸ்இஆர்-கள் மற்றும் இத்தரவரிசையில் இடம்பெற்ற 50 முதன்மைக் கல்வி நிறுவனங்களின் புத்தம்புது கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், 'இன்வென்டிவ் 2025' நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்காக 183 கண்டுபிடிப்புகளை, நிபுணர் குழுவினர் ஏற்கெனவே தேர்வு செய்துள்ளனர். இன்னும் பல கண்டுபிடிப்புகள் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஆத்மநிர்பர் பாரத்' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, இந்த கண்காட்சி, இந்தியத் தொழில்துறைக்கு சிறந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புதுமைகளைக் காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, "நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தவும், தாங்கள் தொழில் ஊக்குவிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப பரிமாற்றங்கள், சந்தைக்கான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் 'இன்வென்டிவ்' ஒரு தளமாக அமைந்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிப்ரவரி 28ம் தேதி ஐஐடி வளாகத்தில் முன்னணித் தொழில்துறையினர்,கல்வியாளர்கள் முன்னிலையில் 'இன்வென்டிவ் 2025' கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.
இதில் பங்கேற்கும் கல்வி நிறுவனங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தும் வகையில் மொத்தம் 183 அரங்குகள், கருப்பொருள்கள் தொடர்பான உரைகள், குழு விவாதங்கள் என இந்நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமுத்திரயான் ‘மட்ஸ்யா - 6000’: கடல் நீர் சோதனையை நிறைவு செய்து சாதனை!
தொழில்துறையில் பெரும் தாக்கங்களுக்கு வழிவகுத்த இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் முன்னணி தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் குறித்த குறிப்பேடு இந்த நிகழ்வின்போது வெளியிடப்படும்.தொழில்துறை, கல்வித்துறை, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முன்னணி நிபுணர்களை இக்கண்காட்சி கொண்டிருக்கும்.
ஒரு கல்வி நிறுவனத்திற்கு 8 ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 262 கண்டுபிடிப்புகள் விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், 183 கண்டுபிடிப்புகள் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை தொழில் துறையினர் பார்வையிட்டு தொழிலாக தொடங்குவதற்கு இக்கண்காட்சி அரிய வாய்ப்பாக அமையும். 'மிராக்கிள் ஆன் வீல்ஸ்' என்கின்ற மாற்றுத் திறனாளிகளின் பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி கடந்தாண்டு 400 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது. இந்த ஆண்டும் 400 கண்டுபிடிப்பதற்கு காப்புரிமை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருத்துவம் சார்ந்த உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து தற்போது இறக்குமதி செய்கிறோம். அந்த உபகரணங்கள் இந்திய தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உள்நாட்டிலேயே தயாரிக்கவும் தீவிரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
வளர்ந்து வரும் விமான போக்குவரத்து தேவைக்கேற்பவும்., எரிசக்தி, கடல்சார் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தொழில்துறையினர் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு அதனை உற்பத்திப் பொருட்களாக மாற்றலாம்.
தொழில் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத்தை தொடர்ந்து, இந்தத் தொடரின் மூன்றாவது நிகழ்வை தற்போது சென்னை ஐஐடி நடைபெற உள்ளது." என்று காமகோடி கூறினார்.