By ரவிச்சந்திரன்
சென்னை: மத்திய அரசின் ஆழ்கடல் இயக்கச் செயல்பாடுகளின் கீழ், புவி அறிவியல் அமைச்சகம், சமுத்திரயான் திட்டத்தின் ஒரு பகுதியாக "மட்ஸ்யா-6000" என்று பெயரிடப்பட்ட 4-ஆவது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தது. இதனை மேம்படுத்தும் பணிகள் முழுவதும், அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னையிலுள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் (NIOT / நியாட்) ஒப்படைக்கப்பட்டது.
இந்த நேரத்தில், ‘மட்ஸ்யா-6000’ கடல்நீருக்கடியில் மூன்று மணிநேரம் நிலைநிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. இதில் வெற்றி கிடைத்திருப்பதாக புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த திட்டம் உலகளவில் நடந்துவரும் ஆழ்கடல் ஆய்வுகளில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
ஆழ்கடலுக்கு மனிதன் செல்வதும், அங்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்குமான சாத்துயக்கூறுகள் இதன் மூலம் புலப்பட்டுள்ளன. இதுகுறித்து நம் ஈடிவி செய்தியாளர் ரவிச்சந்திரன், நியாட் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணனுடன் பிரத்யேகமாக உரையாடினார். அதன்வாயிலாக, மனிதனை ஆழ்கடலுக்கு; சுமார் 20,000 அடிக்கு கீழே அனுப்பும் திட்டத்தின் ஆய்வுப் பணிகள் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என தெரியவந்துள்ளது.

மேலும், பாலாஜி ராமகிருஷ்ணன் நம்முடன் பகிர்ந்த சில முக்கியமான தகவல்களை கேள்வி பதில்களாகக் காணலாம்.
மனிதர்களை ஆழ்கடலுக்கு அனுப்பும் திட்ட பணிகள் எந்த நிலையில் உள்ளது?
சமுத்திரயான் என்பது ஆழ்கடல் ஆய்வின் ஒரு எதிர்காலத் திட்டமாகும். அதன் ஒரு பகுதியாக உள்ளது ‘மட்ஸ்யா-6000’ நீர்மூழ்கி அமைப்பு. ‘நியாட்’-ஐச் சேர்ந்த மூன்று அறிவியலாளர்களை 6,000 மீட்டர் (19,685 அடி) ஆழ்கடலுக்கு அனுப்பப் போகிறோம். அங்கு இருக்கும் கடல் உயிரினங்கள் என்ன, அங்கிருந்து ஏதேனும் மாதிரிகளை எடுத்து வர முடியுமா என்பது தான் ஆய்வின் முதல்நிலை குறிக்கோள்.
இதற்காக ‘மட்ஸ்யா-6000’ நீர்மூழ்கி அமைப்பை நம் ‘நியாட்’ வளாகத்தில் மேம்படுத்தி வருகிறோம். இதன் முழு வேலைபாடுகளும் சென்னை பள்ளிக்கரணை நியாட் வளாகத்திலேயே நடந்தது பெருமைக்குரியது. நீர்மூழ்கி மேம்படுத்தப்பட்டதும், நேராக நாம் 19,685 அடியை எட்டிவிட முடியாது. இதற்காக பல படி நிலைகளை கடந்து வர வேண்டும். முதலில் 500 மீட்டர், அதாவது சுமார் 1,640 அடி கடலினுள் அனுப்பி, சோதனை செய்ய வேண்டும்.

தொடர்ந்து அடுத்தடுத்த சோதனைகளில் வெற்றி கண்டால், ஆண்டின் இறுதியில் 500 மீட்டர் கடலுக்கு அடியில் ‘மட்ஸ்யா-6000’ அனுப்பப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும். இதற்கு முன்னதாக நீர்மூழ்கி அமைப்பில் இருக்கும் மூலக்கூறுகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதில் என்னென்ன பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது
மூலக்கூறுகள் என்பது அதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி, மிதவையை சரியாகக் கையாளும் அமைப்புகள் போன்றவை ஆகும். அவற்றை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். ஏனென்றால், மொத்த அமைப்பின் எடை சுமார் 26,500 கிலோ (25 டன்) வரை இருக்கும். இவ்வளவு எடையுள்ள அமைப்பு உள்ளே சீராக சென்று, அதேபோல கட்டுப்பாடுடன் மேலே வரவேண்டும். எடையின் தாக்கத்தினால் அமைப்பு வேகமாக நகர்ந்தால், உள்ளே இருக்கும் மனிதர்களுக்கு ஆபத்து நேரிடும்.
இதற்காக பல மேம்பட்ட எலெக்ட்ரானிக் அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கும். மேலும், உள்ளே சென்று ஆய்வுகளுக்கான மாதிரிகளை (Scientific Payload) சேகரித்து வர வேண்டும். அந்த எடையையும் ஆய்வுகளின் போது கணக்கிட்டு சோதனைகளை மேற்கொள்வது அவசியம். கூடுதலாக இதில் பல விதத்தில் வேலை செய்யும் முக்கிய சென்சார் அமைப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆழ்கடலுக்கு போகும் போது அமைப்புகள் எதேனும் பொருள்களிலோ, உள்ளிருக்கும் பாறைகளிலோ முட்டாதவாறு இந்த சென்சார்கள் பாதுகாத்துக்கொள்ளும்.
இதில் மேலே இருக்கும் 21 விட்ட அளவு கொண்ட கோள வடிவ பகுதிக்குள் (Spherical hull) நாம் அனுப்பும் அறிவியலாளர்கள் இருப்பர். இந்த பகுதி தான் அறிவியலாளர்களுக்கு ஆக்சிஜன் வழங்குவது, அவர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவது, உள் அமைப்பினுள் ஈரப்பதத்தை ஒரே சீராகப் பராமரிப்பது என்பன போன்ற உயிர் காக்கும் வேலைகளை செய்யும். இவை சரியாக நடந்தால் மட்டுமே, ஆய்வுகளை நாம் மேற்கொள்ள முடியும்.
காட்டுப்பள்ளி ஆய்வுத்தளம்
இதற்காக, காட்டுப்பள்ளி துறைமுகத்தில் என் அண்டு டி (L&T) நமக்களித்த இடத்தில் சோதனைகளை செய்தோம். அந்த இடத்தில் கடல் நீரின் ஆழம் 10 மீட்டருக்கும் (சுமார் 32 அடி) குறைவாகவே இருந்தது. இந்த சோதனைகளை மேற்கொள்ள நிலையான படிகள் உள்ளன.
முதலில் தரையில் வைத்து, மட்ஸ்யா-6000 சோதனை செய்யப்படும். பின்னர், ஐந்து முறை மனிதர்கள் இல்லாமல் கடல் நீருக்கடியில் சோதிக்கப்படும். இதில் நீர் புகாத வண்ணம் அமைப்பு திடமாக உள்ளதா, காற்று கசிவு ஏதேனும் உள்ளதா, சென்சார்கள் வேலை செய்கிறதா போன்றவை சரிபார்க்கப்படும்.
இதன்பின்னர், பயன்பாட்டு அங்கீகார வாரியத்திடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளுடன் விளக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் அனுமதி அளித்த பின் தான் அறிவியலாளர்களை உள்ளே அனுப்பி சோதனை செய்ய முடியும். அந்த நிலையை தான் தற்போது அடைந்துள்ளோம். அறிவியலாளர்கள் மூவரை, மூன்று மணிநேரம் கோள வடிவ அமைப்பினுள் இருக்க செய்து, கடல் நீருக்கடியில் நீர்மூழ்கியை செலுத்தினோம். தொடர்ந்து, உள்ளே அவர்களின் நிலை என்ன என்பதை கண்காணித்தோம். அப்போது தான் இதில் இருக்கும் ஒரு சவால் எங்களுக்கு புலப்பட்டது.

நீருக்கடியில் சோதனை செய்யும்போது நீருக்கடியில் உள்ள தொடர்பில் பிரச்னைகள் இருந்தது. இதனால், உள்ளே இருக்கும் அறிவியலாளர்கள் உடன் தொடர்புகொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டது. இது அடுத்தடுத்த சோதனைகளில் சரிசெய்யப்படும் என்று நம்புகிறோம்.
மட்ஸ்யா-6000 அடுத்த திட்டங்கள் என்ன?
தேவையான அனைத்து மிதவைகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 500 மீட்டர் (1,640 அடி) ஆழத்தில் சோதனை செய்யப்படும்.
ஆழ்கடலில் அறிவியலாளர்களை அனுப்புவதன் பலன்?
தற்போது தானியங்கி நீர்மூழ்கிகள் உள்ளன. பல திறன் வாய்ந்த கேமராக்கள் அதிலும் இருக்கும்; 6,000 மீட்டர் வரை செல்லக்கூடியதும் ஆகும். ஆனால், மனித ஆய்வுகள் என்பது வித்தியாசமானது. கண்ணால் பார்த்து ஆழ்கடலின் அதிசயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம். புதிய தொழில்நுட்பத்தை மனித உணர்வுகளோடு சோதித்துப் பார்க்கலாம்.
மட்ஸ்யா-6000 எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்கும்
மட்ஸ்யா-6000 அமைப்பானது, அவசரநிலை தருணத்தில் 96 மணிநேரம் வேலை செய்யும். ஆனால், ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது. அதேவேளை, ஆய்வுப் பணிகளுக்காக அமைப்பு செயல்படும்போது, 12 மணிநேரம் தாக்குப்பிடிக்கும். அதாவது, 12 மணிநேரத்திற்குள் உள்ளே சென்று ஆய்வை முடித்துவிட்டு, கடல் மேற்பரப்பிற்குள் வந்துவிடும்.
வெற்றிகண்ட கடல்நீர் சோதனை எப்படி இருந்தது
கோள வடிவ அமைப்பினுள் ஒரு பைலட், இரு அறிவியலாளர்கள் இருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை ஒதுக்கப்பட்டிருக்கும். இதே முறை தான் 6,000 மீட்டர் போகும்போது நடைபெறும். மட்ஸ்யா அமைப்பை இயக்கும் பணியை பைலட் மேற்கொள்வார்.
உள்ளே செல்லும் அவர்கள், உணவு, தண்ணீர் என பெரிதாக எதுவும் எடுத்துக்கொள்ள முடியாது. இயற்கை உபாதைகள் கழிப்பதற்கான சூழல் இருக்காது என்பதால், கட்டுப்பாடு மிக அவசியமானதாகும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திடமுடன் இருக்க பல சோதனைகளும், பயிற்சிகளும் உள்ளே செல்பவர்களுக்கு வழங்கப்படும்.
வெளியே வந்து அறிவியலாளர்கள் என்ன கூறினார்கள்?
கட்டுப்பாட்டு அறையில் இருந்த பிற அறிவியலாளர்கள் தான் தங்களுக்கு பலம் எனக் கூறினார்கள். மேலும், இது தங்கள் குழுவினரால் முற்றிலும் உருவாக்கப்பட்டதால், எவ்வித பயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
இவற்றை நம்முடன் பகிர்ந்த நியாட் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணனிடம் செய்தியாளர், ‘நீங்கள் இதனுள் ஒரு மணிநேரம் இருந்துள்ளீர்கள், உங்கள் அனுபவம் என்ன’ என்று வினவினார். அதற்கு பதிலளித்த அவர், “நேரடி அனுபவத்திற்காக நானும் கோள வடிவ பகுதிக்குள் கடலின் மேல் மட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தபோது இருந்தேன். ஒரு மணிநேரம் இருந்தேன். உள்ளே நிறுவப்பட்டிருந்த உயிர் காக்கும் அமைப்புகள் சீராக வேலை செய்தது. எந்த அசெளகரியத்தையும் நான் உணரவில்லை,” என்றார்.
நியாட் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் நம்முடன் பகிர்ந்த இந்த தகவல்கள் அடிப்படையில், ஆழ்கடல் ஆய்வில், இந்தியா பல உயர்ந்த நிலைகளை விரைவில் எட்டும் என்பது உறுதியாகியுள்ளது.