தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிலேயே திரவநிலை மீத்தேன்/ ஆக்சிஜன் எரிபொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தி சிறிய ரக ராக்கெட்டை உருவாக்கி, காஸ்மிக் போர்ட் (COSMICPORT) என்ற நிறுவனம் அசத்தியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ (ISRO) 2-வது ராக்டெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைப்பதற்காக கடந்தாண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்படி ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2026 க்குள் இதற்கான பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது.
காஸ்மிக் போர்ட் (COSMICPORT):
இந்த நிலையில், காஸ்மிக் போர்ட் (COSMICPORT) என்று விண்வெளி ஆய்விற்கு புதுமையான தொழில்நுட்பங்களை வழங்கும் நிறுவனம் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகிறது. இதற்கான தலைமையகத்தை, தூத்துக்குடி தட்டப்பாறையில் விளக்குப்பகுதியில் சுமார் 1.4 ஏக்கர் பரப்பளவில் இந்நிறுவனம் அமைத்து வருகிறது. இதனை, தூத்துக்குடியைச் சேர்ந்த நவீன் டி.எஸ் வேலாயுதம், லிவான்ஸ் அமுதன் ஆகியோர் இணைந்து நிறுவியுள்ளனர்.
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் இதற்கான ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. தற்போது நிதி திரட்டும் பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலக அளவில் போட்டித் திறன் உடையதாக்குவதற்காக, செலவினங்களை குறைத்து, மறுபயன்பாட்டிற்கான தொழில் நுட்பங்களை உருவாக்க மெத்தலாக்ஸ் (Metalax) (திரவநிலை மீத்தேன்/ ஆக்சிஜன்) எரிபொருள் தொழில்நுட்பம் மூலமாக இயங்கும் இயந்திரங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் குறைந்த செலவில் ராக்கெட் ஏவுத்தளத்திற்கும், மீள் பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியும். இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்ப முறையை இந்த நிறுவனம் தான் முதன் முறையாக தொடங்கியுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுமார் 15,000 சதுர அடியில் ஒரு உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மைய கட்டிடமும் கட்டப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, காஸ்மிக் போர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நவீன் டி.எஸ் வேலாயுதம் கூறுகையில், “இந்த நிறுவனம் கடந்த 2023 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்குவதற்கு குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் அறிவிப்பு முக்கிய காரணமாகும். திரவநிலை மீத்தேன்/ ஆக்சிஜன் பயன்படுத்தி சிறிய ரக ராக்கெட்டை உருவாக்கி வருகிறோம். முதற்கட்டமாக 120 நியூட்டன் உந்து சக்தி கொண்ட இயந்திரம் மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது.
வருகிற 2026-ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் முழு உந்து சக்தி கொண்ட இயந்திர ஓட்டத்திற்கு தயாராகி வருகிறோம். வரும் 2028 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக, சுமார் 600 கிலோ எடையினை கொண்டு செல்லும் ராக்கெட் உருவாக்கப்படும். இதனால், சுமார் 100 கிலோ எடை கொண்ட ஆறு செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தலாம்.
வேலைவாய்ப்பு:
இங்குள்ள பொறியாளர்கள் மகேந்திரகிரி, திருவனந்தபுரம், பெங்களூர் ஆகியவற்றில் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றனர். மேலும், இதற்கான உதிரி பாகங்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுகுறு தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தி, அவர்கள் மூலம் உற்பத்தி செய்ய முயற்சி நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் நேரடியாக, மறைமுகமாக சுமார் 1000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், வருகிற 6 ஆண்டுக்குள் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர்கள் 200 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.