உடல்நலம் மற்றும் நல்வாழ்வு தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் வகையில், சாம்சங் அதன் புதிய கேலக்சி ரிங்கை (Galaxy Ring அல்லது கேலக்ஸி ரிங்) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.38,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் ரிங், சாம்சங் இணையதளம், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான பிளிப்கார்ட், அமேசான் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது. அறிமுகம் சலுகையாக, ஸ்மார்ட் ரிங்கை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, சாம்சங் 25W டிராவல் அடாப்டரை இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை அக்டோபர் 18-ஆம் தேதி வரை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு விரல் புரட்சி:
கேலக்சி ரிங் என்பது வெறும் அழகான ஆபரணம் அல்ல; அது உங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகத் திகழும் என சாம்சங் தெரிவித்துள்ளது. இதயத் துடிப்பு, தூக்க முறைகள், உடல் செயல்பாடு, மன அழுத்த நிலைகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நல அளவீடுகளை இது துல்லியமாக கண்காணிக்கிறது.
டைட்டானியத்தால் ஆன இந்த ரிங், நீடித்த தரத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மிகவும் ஸ்டைலான லுக்கையும் கொடுக்கிறது. இதன் பாதுகாப்பிற்காக ஐபி68 (IP68) தரமதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த கேலக்சி ரிங், நீர் மற்றும் தூசி எதிர்ப்பை தாங்கும் திறனுடன் இருக்கிறது.
சாம்சங் கேலக்சி ரிங் அம்சங்கள் (Samsung Galaxy Ring Specifications):
கேலக்சி ரிங்கின் சிறப்பம்சங்களில் ஒன்று அதன் மேம்பட்ட தூக்கக் கண்காணிப்பு ஆகும். உங்கள் தூக்கத்தின் வெவ்வேறு நிலைகளைக் கண்காணிப்பதோடு, தூக்கத்தில் ஏற்படும் குறட்டையையும் பகுப்பாய்வு செய்கிறது. இந்தத் தகவல்களைக் கொண்டு நம் தூக்கத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.