ஹைதராபாத்: பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளப் பயன்பாடுகளை நிர்வகிக்கும் டெக் நிறுவனமான ‘மெட்டா’, ஐந்தாண்டுகளுக்கு முன் தங்களின் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) கண்ணாடிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. தகவல் உலகத்தையும், சுற்றியுள்ள இயற்பியல் உலகையும் ஒரு கண்ணாடியில் இணைக்கும் மெட்டாவின் கனவு திட்டம், தற்போது புதிய நிலையை அடைந்துள்ளது. அதன் விளைவாக, நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஓரியன்’ (Orion) ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) கண்ணாடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை உருவாக்கப்பட்ட ஆக்மென்டட் ரியாலிட்டி (AR) கண்ணாடிகளில் இது சிறந்ததாகவும், மேம்பட்டதாகவும் இருக்கிறது என மெட்டா இதன் அறிமுக நிகழ்வில் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் யுகத்தில் மக்களை இணைக்க இது ஒரு பாலமாக இருக்கும் எனவும் மெட்டா நம்பிக்கை வைத்திருக்கிறது. தற்போது, இந்த கண்ணாடியைக் குறித்து பார்க்கும்முன், ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி ஆகிய இரண்டுக்குமான வித்தியாசங்களை அறிந்துகொள்ள வேண்டும்.
ஆக்மென்டட் ரியாலிட்டி / விர்ச்சுவல் ரியாலிட்டி இரண்டிற்குமான வேற்றுமை என்ன?
ஒரு கண்ணாடி உங்களை மாய உலகிற்கு அழைத்துச் செல்லும் என்றால், அது மெய்நிகர் தொழில்நுட்பம் எனப்படும் விரிச்சுவல் ரியாலிட்டியால் சாத்தியமாகும். இதுவே, நாம் பார்ப்பதில் புதிய டிஜிட்டல் லேயர்கள், அதாவது அடுக்குகளை இணைத்தால், அதை ஆக்மென்டட் ரியாலிட்டி எனக் குறிப்பிடுகிறோம். உங்களுக்கு இதை சற்று எளிதாக சொன்னால், புரியும் என்று நினைக்கிறேன்.
ஆக்மென்டட் ரியாலிட்டி: எடுத்துக்காட்டாக, இங்கு நீங்கள் ஆக்மென்டட் ரியாலிட்டி (AR அல்லது ஏஆர்) கண்ணாடியை அணிந்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தொலைவில் அல்லது வெளிநாட்டில் இருக்கும் நண்பருடன் உங்களுக்கு செஸ் விளையாட வேண்டும் என்று தோன்றுகிறது. அவரிடமும் ஏஆர் கண்ணாடி உள்ளது. இதை வைத்து, உங்கள் கண்முன் இருக்கும் எதோ ஒரு டேபிளில் செஸ் போர்டை கொண்டு வர முடியும். அதில் உங்கள் நண்பரையும் இணைத்து மெய்யான உலகில் செஸ் விளையாடுவது போன்ற அனுபவத்துடன் அதை விளையாட முடியும்.
மெய்நிகர் தொழில்நுட்பம் (VR - Virtual Reality):
நிகழ்காலத்தில் இருந்து நம்மை இன்னொரு மாயை உலகத்திற்கு அழைத்துச் செல்வது தான் மெய்நிகர் தொழில்நுட்பம். எடுத்துக்காட்டாக, மெய்நிகர் கண்ணாடிகளை அணிந்துகொண்டு விளையாடினாலோ அல்லது 3டி படங்களைப் பார்த்தாலோ, 360 டிகிரி காட்சித் தரத்துடன் அதனைக் கண்டு களிக்கலாம். முக்கியமாக, அந்த இடத்திலேயே நீங்கள் இருப்பதைப் போன்று உங்களால் உணர முடியும். சமூக வலைத்தளங்களில் வலம் வரும் சில காணொளிகளைக் கூட பார்த்திருப்பீர்கள். விஆர் கண்ணாடியை அணிந்துகொண்டு, பார்வையாளர்கள் அலறுவது, பயப்படுவது போன்ற பல காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.
இதையும் படிங்க |
ஓரியன் ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகள் அவசியம் என்ன?
ஏஆர் கண்ணாடிகள் வாயிலாக தொழில்நுட்பத்தை விரைவாக மனிதர்கள் மேம்படுத்த முடியும் என மெட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது.
- விரிவான டிஜிட்டல் அனுபவங்கள்:ஸ்மார்ட்போன் திரைக்கு மாறாக, ஏஆர் கண்ணாடிகள் வாயிலாக நாம் 2டி அல்லது 3டி திரையை கண்முன்னே கொண்டுவரலாம். உலகில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும், இதை நாம் பயன்படுத்த முடியும்.
- AI உடன் இணைப்பு:ஓரியன் கண்ணாடிகள் உங்கள் சுற்றுப்புறத்தை உணர்ந்து, உங்கள் தேவைகளை முன்னறிவிக்க செயற்கை நுண்ணறிவுடன் ஒத்திசைந்து வேலை செய்கிறது.
- எளிதாக அணியக்கூடிய வடிவம்: ஓரியன் கண்ணாடிகள் மிகவும் இலகுவானவை. எந்த சூழலிலும் அணிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.