சென்னை: திமுகவில் தருமபுரி கிழக்கு, திருப்பூர் வடக்கு மற்றும் விழுப்புரம் வடக்கு ஆகிய பகுதிகளில் உள்ள மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் நேற்று (பிப்.22) சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கட்சியில் உள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேபோல ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பொறுப்பாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்:
திமுகவில் தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் தடங்கம் சுப்பிரமணியனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக பி.தர்மசெல்வனை பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு மாநகர கட்சிப் பொறுப்பாளர் நியமனம்:
திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ந.தினேஷ்குமார், திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற, வெங்கமேடு அங்கேரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈ.தங்கராஜ் திருப்பூர் வடக்கு மாநகரப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகரக் கட்சி அமைப்பின் பிற நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “நிதி தராமல் தன்மானத்தின் மீது கை வைக்கிறார்கள்” - அமைச்சர் எ.வ.வேலு
விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் போட்டியின்றி தேர்வு:
திமுகவின் 15வது பொதுத்தேர்தலில், விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 13-ம் தேதி வெளியான கட்சி சீரமைப்பு அறிவிப்பில், செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனால் விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் வேட்புமனு செய்ய திமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கு ப.சேகர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவரது மனு ஏற்கப்பட்டு, விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.