ஆந்திரா:இந்தியா விண்வெளித் துறையில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த ஆண்டின் இறுதியில் நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 செயற்கைக்கோளை அனுப்பி, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது. அதனையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்தது.
2024ஆம் ஆண்டின் முதல் நாளான ஜன.1ஆம் தேதி, விண்வெளியில் கருந்துளை ஆய்வுக்கான எக்ஸ்போசாட் உடன், பி.எஸ்.எல்.வி சி58 (PSLV-C58) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனைத் தொடர்ந்து, தற்போது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வானிலை மாறுபாடுகளைக் கண்டறிந்து தகவல்களை வழங்குவதற்காக, இன்சாட் 3டிஎஸ் என்ற அதி நவீன செயற்கைக்கோளை இந்தியா இன்று (பிப்.17) செலுத்தவுள்ளது.
இந்த இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள், ஜி.எஸ்.எல்.வி எஃப்-14 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.17) மாலை 5.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான 27.30 மணி நேர கவுண்டவுன் நேற்று மதியம் 2.05 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 2 ஆயிரத்து 275 கிலோ எடையுள்ள இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோளில், 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.