சென்னை: பாலியல் வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிடுவது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பான ஒன்று இதன் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியிட்ட நபர்கள் குறித்து விசாரணை கொண்டு வருகின்றனர் என சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
20 வழக்குகள் நிலுவை:சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் அருண், "அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியும் பேராசிரியரும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த தகவல் அறிக்கை என்பது பாதிக்கப்பட்ட நபர் அளிக்கக்கூடிய தரவுகள் அனைத்தும் அடங்கியதாக இருக்க வேண்டும்.
புகாரின் பேரில் கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் பல்வேறு ஆதாரங்களை திரட்டி இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை 25ஆம் தேதி காலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஞானசேகரிடம் விசாரணைகள் மேற்கொண்டு பின்னர் பாலியல் வழக்கு தொடர்பான குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை உறுதி செய்த பின்னர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தோம்.கைது செய்யப்பட்ட ஞானசேகர் மீது 2013 ஆண்டு முதல் ரவுடித்தனம் குறித்த 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஞானசேகர் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரியவந்துள்ளது.
புகார் பெற நடவடிக்கை: இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கையானது வெளியில் வரக்கூடாது அப்படி வெளியில் வந்தால் அது சட்டப்படி குற்றமாகும். அதேபோல் அப்படி வெளியாகிய முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விவாதிப்பதும் சட்டப்படி குற்றமாகும். அதன்படி முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட நபர்களை கண்டறிய கோர்ட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளோம். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளின் தகவல்களை வெளியிடக்கூடாது என்பது சட்டமாக உள்ளது.
ஞானசேகர் மீது பதியப்பட்டுள்ள இருபது வழக்குகளில் 6 வழக்குகள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் மீதமுள்ள வழக்குகள் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு பொறுத்தவரையில் ஞானசேகரிடம் வேற எந்த ஒரு பெண்களும் பாதிப்படைந்ததாக காவல் நிலையத்தில் இதுவரை புகார் எதுவும் தரவில்லை. மாறாக ஞானசேகரிடம் மேற்கொள்ள உள்ள விசாரணையில் அவரது அலைபேசிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு அப்படி பெண்கள் யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் அவர்களிடம் புகார் பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இதையும் படிங்க: எஃப்ஐஆர் வெளியாக காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள்...தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக ஞானசேகர் மீது ஏற்கனவே நான்கு பிரிவுகளில் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் அவர் மீது கூடுதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட ஞானசேகர் மீது 2019க்கு பிறகு எந்த வித வழக்குகளும் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்படவில்லை.
Immediate action taken on the complaint from a student of Anna University, Guindy Engineering College. Accused arrested.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 25, 2024
A student of Guindy Engineering College had lodged a complaint at the Kotturpuram All Women Police Station that while she was talking to her boyfriend behind… pic.twitter.com/JLLw8LknOP
நடுநிலை செயல்பாடு: இந்த பாலியல் வழக்கு மட்டுமின்றி எந்த ஒரு வழக்காக இருந்தாலும் காவல்துறை நடுநிலையாக செயல்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் பதவிப்பிரமாணம் எடுக்கும்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். மேலும் காவல்துறைக்கு இது போன்ற வழக்குகளை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை அதனை பிறர் வேண்டுமானால் செய்யலாம். அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய வகைகளில் போராட்டங்களை ஒருபொழுதும் காவல்துறை அனுமதிக்காது.
அண்ணா பல்கலைக்கழகவளாகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. டெக்ஸ் கோ என்று அழைக்கக்கூடிய அமைப்பில் எக்ஸ் சர்வீஸ் மேன் 140 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக நுழைவு வாயில்கள் தவிர்த்து வேறு ஏதாவது வழிகளில் பொதுமக்கள் வர வாய்ப்புள்ளதா என்கின்ற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது அப்படி வருகை புரிபவர்களில் சந்தேகப்படும் பட்சத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டிகள் விசாரணை மேற்கொள்கிறார்கள்.
காவல்துறை மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் நடைபெற்ற மறுநாள் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் அந்த அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக காவல்துறை தக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குற்றவாளிகள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் காவல்துறை அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்,"என்றார்.