சென்னை: ’விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கிள் 'சவாதிகா' இன்று வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் துணிவு திரைப்படம் வெளியானது.
இதனைத்தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி வெளியாகிறது. விடாமுயற்சி பயணம் தொடர்பான கதை என கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு அதிக நாட்கள் அசர்பைஜான் மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்றது. விடாமுயற்சி வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் கடைசி வரை படப்பிடிப்பு நடைபெற்றது. கடைசியாக நடிகை ரம்யா படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அப்டேட் வெளியிட்டது.
விடாமுயற்சி டீசர் நள்ளிரவில் வெளியாகி ரசிகர்களுக்கு படக்குழு சர்ப்ரைஸ் அளித்தது. விடாமுயற்சி டீசர் யூடியூபில் ட்ரெண்டானது. இந்நிலையில் படத்தில் பாடல்களே இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்று 'சவாதீகா' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ள நிலையில், அறிவு பாடல் வரிகளை எழுதியுள்ளார். சவாதீகா பாடலில் சீமான் பேசி, இணையத்தில் மீம் டெம்ப்ளேட்டாக வலம் வந்த 'இருங்க பாய்' வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது. சவாதீகா பாடலின் லிரிக் வீடியோவும் (lyric video) தற்போது வெளியாகியுள்ளது
இதையும் படிங்க: அருணுக்காக சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த அர்ச்சனா... காதல் மழையில் பிக்பாஸ் வீடு! - BIGG BOSS 8 TAMIL
சவாதீகா பாடல் அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த வாரம் அஜித்குமார் எடை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கியது. அஜித்குமார் தீனா பட காலகட்டத்தில் ஸ்லிம்மாக இருந்தது போல் உள்ளார் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள சவாதீகா பாடலிலும் அஜித் ஸ்லிம்மாக தோன்றுகிறார். அஜித், த்ரிஷா இருவரும் கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.