சென்னை: ஸ்பேஸ் சோன் இந்தியா 24 ஆகஸ்ட் 2024 அன்று கோவளம் கடற்கரையில் RHUMI 3 என்ற ஹைபிரிட் ராக்கெட் கியூப் செயற்கைக்கோள்களையும் 50 PICO செயற்கைக்கோள்களையும் சராசரி கடல் மட்டத்திலிருந்து அதிகபட்ச உயரத்தில் கொண்டு சென்றது. காஸ்மிக் கதிர்வீச்சின் தீவிரம், புற ஊதா கதிர்வீச்சு மற்றும் காற்றின் தரம் போன்ற வளிமண்டல அம்சங்களைப் பற்றிய தரவுகளை சேகரிப்பது குறித்து வானில் ஏவப்பட்டது. இந்த வெளியீட்டை 10,000 மாணவர்கள், ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் மாநில அமைப்புகள் பார்த்தனர்.
ஸ்பேஸ் சோன் இந்தியா (Space Zone India) என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமாகும். இது செலவு குறைந்த ராக்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த நிறுவனம் 2020அன்று ஆனந்த் மேகலிங்கத்தால் நிறுவப்பட்டது. புதிய நகர்வு குறித்து ஸ்பேஸ் சோன் இந்தியாவின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான ஆனந்த் மேகலிங்கம் ஈடிவி பாரத்திடம் பேசினார்.
ராகெட் மீது கொண்ட ஆர்வம்:
அப்போது அவர் கூறுகையில், "ஏரோனாட்டிகல் பொறியலில் தேர்ச்சிபெற்று, ராக்கெட் மீதிருந்த அதீத ஆர்வம் காரணமாக என் பயணத்தையும், பார்வையையும் அதன் மீது செலுத்தினேன். தற்போது, ராகெட்டை வானில் செலுத்தி வருகிறோம். நான் இதில் ஆர்வம் செலுத்தும் போது தவறுகள் ஏற்படாமல் இருக்க கவனமாக இருந்தேன். இதனால் புது அனுபவங்கள் நிறைய கிடைத்தன. ஆனால் இவற்றில் 15,000 முறைக்கு மேல் தோல்விகளைக் கண்டுள்ளோம். அந்தத் தவறுகளை சரி செய்து அதற்கான தீர்வுகளை கொண்டு வந்து அறிவியல் ரீதியாக எங்களது திறன்களை வளர்த்துக் கொண்டோம்.
ஒரு சில நேரங்களில் இதை செய்தால் இந்த தவறு நடக்கும் என்று முன்னரே நாங்கள் அறிந்துவைத்திருந்தோம். அந்த அளவிற்கு பக்குவம் எங்களுக்கு இந்த ராக்கெட் செய்வதில் அனுபவம் கிடைத்தது. ராக்கெட் செய்வதற்கு மற்றும் அதனை ஏவுவதற்கு அரசாங்கத்திடம் இருந்து 28 துறைகளில் அனுமதி வாங்க வேண்டி இருந்தது. அரசாங்கம் எங்களுக்கு உதவியளித்து இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்தது.
2023-ஆம் ஆண்டு நாங்கள் ஹைபிரிட் ராக்கெட்டை ஏவுவதற்கு திட்டம் வகுத்தோம். அதனடிப்படையில் 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதியைத் தேர்வு செய்தோம். இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே என்று நாங்களும் மெதுவாக வேலையை தொடங்கினோம். ஆனால் நாள்கள் வேகமாக ஓடிவிட்டது. இந்த வருடம் ஆகஸ்ட் 1ஆம் தேதி நாங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்தோம்.
சவாலான காற்று
நாள்கள் நெருங்க நெருங்க எங்களுக்கு பயம் அதிகரித்தது. எப்படியாவது வெற்றி அடைய வைக்க வேண்டும் என்று எண்ணம் தான் எங்களுக்குள் இருந்தது. அரசாங்கத்திடமிருந்தும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்தும் ராக்கெட் ஏவுதலுக்கு எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது.
ஆகஸ்ட் 24 அன்று ராக்கெட்டை ஏவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால், அன்று காற்று மிகவும் சவாலாக இருந்தது. நடைபெறும் ஒவ்வொரு காரியமும் சுவாரசியமாக இருந்தது. ஊடக நண்பர்கள் நாங்கள் தயார் செய்வதை படமெடுத்துக் கொண்டிருந்தனர். அதுவும் ஒரு பக்கம் எங்களுக்கு பதட்டமாக இருந்தது. கவுண்டவுன் கொடுத்தவுடன் நான் என் கையில் இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும்.
திக் திக் நிமிடங்கள்:
நான்கு வினாடிகள் தாமதமாகவே விண்ணில் ராக்கெட் ஏவப்பட்டது. தாமதமான இந்த நான்கு வினாடிகள் நான் என்னென்னவோ யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இந்த நான்கு வினாடிகள் என் வாழ்வில் மிக முக்கியமான நேரமாகும். பின்னர் ராக்கெட் வானில் பறந்த பிறகு தான் எங்களுக்கு மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் மற்றும் வெற்றியும் கிடைத்தது.
அரசாங்கத்திடமிருந்து இந்த ராக்கெட் ஏவுவதற்க்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. இது முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள ஹைபிரிட் ராக்கெட். எனவே அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைத்தது காவல்துறையினரும் நிறைய உதவி செய்தனர். இந்த மாதிரி ராக்கெட் செய்து திட்டமிட்டபடி விண்ணில் ஏவுவது என்பது மாணவர்களுக்கும், ஏரோநாட்டிக்கல் மீது ஆர்வம் உள்ள அனைவருக்கும் ஒரு நம்பிக்கை கொடுக்கும்.
மாணவர்களின் புதிய முயற்சிகளுக்கு வித்திடும்:
கிட்டத்தட்ட பத்தாயிரம் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் 7500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளியை சேர்ந்தவர்கள். இந்த மாணவர்களுக்கு விண்வெளியின் மீதும் விஞ்ஞானத்தின் மீதும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்றும், அதில் சாதிக்க வேண்டும் எனும் முயற்சிதான் இது. பெரிய நாடுகளில் உள்ள அறிவியல் விஞ்ஞானிகள் தான் ராக்கெட்டை செய்ய முடியும்; அவர்கள்தான் விண்வெளிக்கு செல்ல முடியும் என்ற கருத்தை உடைப்பது தான் எங்களின் நோக்கம்.
இதையும் படிங்க |
இந்த ராக்கெட்டில் 50 பிக்கோ சேட்டிலைட்ஸ் பொருத்தி அனுப்பி இருந்தோம். இது அனைத்தும் காற்றில் என்ன விதமான மாசு கலந்துள்ளது? ஈரப்பதம் எவ்வளவு உள்ளது? ஓசோன் படலத்தின் தடிமன் என்ன? காஸ்மிக் கதிர்வீச்சு எந்த அளவிற்கு உள்ளது? குளோபல் வார்மிங் பூமிக்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது? என்று இந்த செயற்கைக்கோள்கள் அளவிட்டு நமக்கு கொடுக்கும்.
இந்த தரவுகளை இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கொடுப்போம். கடந்த வருடம் ஒரு ராக்கெட் செய்தோம். அதில் சில தகவல் கிடைத்துள்ளது. அதையும் தற்போது கிடைக்கக்கூடிய தரவுகளையும் ஒப்பிட்டு பார்த்து, எந்த அளவிற்கு காற்று மாசுபாடு உள்ளது என்று நாம் கண்டறிய முடியும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.