சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன் மற்றும் கடலூர் பெரியகுப்பம் பெட்டோடையைச் சேர்ந்த ராமு ஆகியோர் சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்த புகாரில், “கடந்த 2019ஆம் ஆண்டு டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட போது நிஜாமுதீன், அமிர்தசரஸ், சண்டிகர் ஆகிய மூன்று ரயில் நிலைய ஓய்வறைகளில் தங்கிக் கொள்வதற்காக முன்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, குறிப்பிட்ட தேதியில் நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்று முன்பதிவு செய்திருந்த ஓய்வறையை ஒதுக்கித் தரும்படி அங்கிருந்த ரயில்வே பணியாளரிடம் கேட்டோம்.
அதற்கு அவர், ஓய்வறை முன்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கணினியில் எந்த பதிவும் இல்லை எனத் தெரிவித்து அறையை ஒதுக்க மறுத்து விட்டார். இதனால், நாங்கள் வேறு வழியில்லாமல் ரயில்வே நடைமேடையில் படுத்து ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த புகார் மீதான விசாரணை ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று (பிப்.5) விசாரணைக்கு வந்தது. அப்போது, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட பொது மேலாளர் தரப்பு, “ஏதாவது ஒரு காரணத்தினால் ஓய்வறை ஒதுக்க முடியாமல் போனால், அதற்கான தொகையை திரும்ப வழங்க விதி உள்ளது. அதன்படி, ஓய்வறைக்காக செலுத்தப்பட்ட தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை ஏற்பு! வேங்கைவயல் வழக்கு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்!
அனைத்து வாதங்களையும் கேட்ட சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர், “அடுத்தகட்ட ரயில் பயணத்தை எளிதாக மேற்கொள்வதற்கு வசதியாகவே ரயில் நிலைய ஓய்வறையை பயணிகள் தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, மனுதாரரைப் பொறுத்தவரை ரயில் நிலைய ஓய்வறையை முன்கூட்டியே பதிவு செய்திருந்தார்.
ஆனால், அவருக்கு அறை ஒதுக்கப்படாததால் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளார். ரயில்வே நிர்வாகத்தின் இந்த சேவை குறைபாடு மனுதாரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதால், மனுதாரர்களுக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயும் சேர்த்து தெற்கு ரயில்வே வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதேபோல, பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஆணையம், அவர்களுக்கும் இழப்பீடாக மொத்தம் 90 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவாக 20 ஆயிரம் ரூபாயும் வழங்க தெற்கு ரயில்வேக்கு உத்தரவிட்டனர்.