இன்ஸ்டாகிராம் (Instagram), தங்களின் பயனர் சேவையை மேம்படுத்த ஆடியோ ஸ்டிரீமிங் தளமான ஸ்பார்ட்டிஃபை (Spotify) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. தற்போது, புதிய மற்றும் பிரபலமான பாடல்களைக் கண்டுபிடிப்பதற்கான இடமாக இன்ஸ்டாகிராம் உருவாகியுள்ளது. இருப்பினும், அதில் நாம் கேட்டு ரசிக்கும் பாடல்களை ஆடியோ ஸ்டிரீமிங் பயன்பாட்டுடன் இணைப்பது பெரும் பிரச்சினையாக இருந்தது.
இதற்காக, இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறி குறிப்பிட்ட பயன்பாட்டில் பாடல்களைத் தேட வேண்டும். இந்த சிரமத்தைத் தவிர்க்க இன்ஸ்டாகிராம் ஸ்பாட்டிஃபை உடன் இணைந்து ஒரு கிளிக்கில் பாடல்களை சேர்க்கும் அம்சத்தினை கொண்டுவந்துள்ளது. இதன் வாயிலாக இன்ஸ்டாகிராமில் கேட்கும் நமக்கு பிடித்த பாடல்களை ஒரே கிளிக்கில் ஸ்பாட்டிஃபை பிளேலிஸ்டில் சேர்க்கமுடியும்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் தங்களின் எக்ஸ் (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ‘பாடல்களை இன்ஸ்டாகிராமில் தேடுங்கள், அப்படியே ஸ்பாட்டிஃபையில் இணைத்துக் கொள்ளுங்கள்,’ என்று குறிப்பிட்டிருந்தது.
இன்ஸ்டாகிராம்-இல் இருந்து ஸ்பாட்டிஃபையில் பாடல்களை எவ்வாறு சேர்ப்பது?
- இன்ஸ்டாகிராம் ரீல், பதிவுகள் அல்லது ஸ்டோரிக்களில் நாம் கேட்கும் பாடல்களை, Spotify-இல் சேர்க்க, கீழ் இருக்கும் பாடல் பெயரைக் கிளிக் செய்யவும்.
- இந்த பக்கம் பாடலைக் கேட்க உங்களை அனுமதிக்கிறது. அதுமட்டுமில்லாமல், அதே பாடல் அல்லது இசையுடன் இணைந்து உருவாக்கப்பட்ட பயனர் காணொளிகள் அல்லது புகைப்படங்களைக் காட்டுகிறது.
- இப்போது மீடியா பிளேயரின் வலது பக்கத்தில் ஸ்பாட்டிஃபை ஐகானுடன் புதிய "சேர்" (Spotify add) பொத்தான் இருக்கும்.
- இந்த "சேர்" பொத்தானை கிளிக் செய்தால், நம் ஸ்பாட்டிஃபை பிளேலிஸ்ட்டில் பாடலைச் சேர்க்க இன்ஸ்டாகிராம் அனுமதிக்கும்.