சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மூன்றாம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை எழுதுவதற்கு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளியின் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்கள் மட்டும் இல்லாமல் தனித்தேர்வர்களாகவும் பொதுத் தேர்வினை எழுதலாம்
பத்தாம் வகுப்பு, 11, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை தனித்தேர்வர்களாக எழுத விரும்புபவர்கள் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் தட்கல் முறையில் தேர்வு எழுதுவதற்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "10,11,12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு தகுதியான தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். தனித்தேர்வர்களுக்கு ஏற்கனவே டிசம்பர் 6ந் தேதி முதல் 20-ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அப்போது விண்ணப்பம் செய்யாதவர்கள், டிசம்பர் 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் அரசு தேர்வுகள் இயக்கத்தின் சேவை மையத்தில் 11,12 ம் வகுப்பிற்கு கூடுதலாக ஆயிரம் ரூபாயும், 10 ம் வகுப்பிற்கு 500 ரூபாயும் செலுத்தி ஆன்லைன் மூலம் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் சேவை மையங்களின் விபரம் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை தனித் தேர்வர்கள் பதிவு செய்வதற்கான தகுதி, அறிவுரைகள் ஆகியவற்றை கொடுக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் (www.dge.tn.gov.in) இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும், முதன்மைக்கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி அலுவலகம், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்களில் அறிந்துக் கொள்ளலாம். இந்தத் தேர்விற்கான அட்டவணையை அதே அரசுத் தேர்வுகள் இயக்ககம்என்ற இணையதளத்திலும் தெரிந்துக் கொள்ளலாம்," என அதில் கூறியுள்ளார்.