சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக மொழியை வைத்து அரசியல் செய்து வருகிறது. மும்மொழிக் கொள்கையில் ஹிந்தியைத் தான் படிக்க வேண்டும் என மத்திய அரசு ஒருபொழுதும் கூறவில்லை. மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டிருப்பது.
இந்த விவகாரம் குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளிக்கும் வகையில் மூன்று பக்கம் உள்ள பதில் கடிதத்தை அனுப்பி உள்ளார். தமிழ் மிக தொன்மையான மொழி, பழமையான மொழி என பிரதமர் மோடி உலக நாடுகளிடம் கூறி வருகிறார். பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், திருவள்ளுவருக்கு உலகம் முழுவதும் சிலை அமைப்போம் என்று, அதே போல் உலகில் ஐந்து இடங்களில் அதை நிறைவேற்றி உள்ளோம்.
பிரதமர் சிங்கப்பூரில் கலாச்சார மையம் அமைத்துள்ளார். பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வர வேண்டியது நிலுவையில் உள்ளது. இதற்கு முழு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வஞ்சிக்கும் செயலை முதலமைச்சர் செய்கிறார்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் மூன்றாவதாக ஒரு மொழியை கற்றுக் கொடுக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மக்கள், பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களை ஏன் ஹிந்தி கற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள். இதுதான் நவீன தீண்டாமையாக இருக்கிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ’அட்டல் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைப்பதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தனர். தமிழ்நாடு அரசு மாணவர்களை வஞ்சிப்பதை நிறுத்திவிட்டு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.
தமிழ்நாடு அரசு நினைவில் கொள்ள வேண்டும் இது 1965ஆம் ஆண்டு கிடையாது. இன்றைய இளைஞர்கள் முன்னேற்றத்தை நோக்கி, வளர்ச்சியை நோக்கிச் சென்று சாதிக்க விரும்புகின்றனர். எனவே நீங்கள் அவர்களைக் கல்வியில் பின்னோக்கி இழுத்துச் செல்ல வேண்டாம்.
இதையும் படிங்க: பிப்ரவரி 26-ல் தவெக பொதுக்குழு கூட்டம்; முன்னேற்பாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்த் ஆய்வு!
நாம் கும்மிடிபூண்டி தாண்டினால் ஒருவருக்கும் அவர்கள் திட்டுவது கூட புரிவதில்லை. ஒரு மொழியை கற்றுக் கொள்வது மூலம் ஒரு மொழி மீது பற்றுதல் ஏற்படும். அதில் என்ன தவறு இருக்கிறது? மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், சிபிஎஸ்சி பள்ளிகளிலும் வழங்கப்படும் உரிமையை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது?
ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் பணம் ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை தெரியுமா? இது எல்லாம் ஒரு விஷயம் கிடையாது. நடைமுறைப்படுத்துவது தான் விஷயம். மொழி தெரிந்த ஆசிரியரை பணிக்கு அமர்த்த முடியவில்லை என்றால் நீங்கள் என்ன அரசாங்கம் நடத்துகிறீர்கள்?” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.