சென்னை : நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 19ஆம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து மக்களவை திமுக எம்பி கனிமொழி விரிவாக பேட்டி அளித்துள்ளார்.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75 ஆவது ஆண்டை முன்னிட்டு மாநிலங்களவையில் கடந்த 17ஆம் தேதி இரண்டாவது நாளாக அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அம்பேத்கர், அம்பேத்கர் என்று கூறுவது ஒரு பாணியாக மாறி விட்டது. கடவுளின் பெயரை அவர்கள்(எதிர்க்கட்சியினர்) பல முறை கூறினால், அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்," என்று கூறியிருந்தார்.
இது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் என்று கூறி அமித்ஷா மன்னிப்புக் கேட்பது மட்டுமின்றி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். டிசம்பர் 19ஆம் தேதியன்று காலையில் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பே பாஜக கூட்டணி, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தனித்தனியே நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டித்து பாஜக உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்பு எம்பிக்களும் மோதிக்கொண்டதாக பரபரப்பு எழுந்தது. ராகுல் காந்தி தள்ளி விட்டதாக பாஜக எம்பிக்கள் இருவர் கொடுத்த புகாரின் பேரில் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்த தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி கனி மொழி நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
தடுக்கப்பட்டோம்: தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை பற்றி தரை குறைவாக பேசி இருப்பதை எதிர்த்து இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் இருந்து நாடாளுமன்ற நுழைவாயில் அருகே ஊர்வலமாக வரும்பொழுது தடுக்கப்பட்டோம். அங்கு ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியினர் ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
ராகுல் காந்தி அந்த இடத்தில் தடுக்கப்பட்டார். அவர் தொடர்ந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அப்பொழுது அந்த இடத்தில் நேரிட்ட குழப்பமான சூழலில் ஒருவர் கீழே விழுந்தார். ராகுல் காந்திக்கும் அங்கிருந்த பாஜக உறுப்பினர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பெண் உறுப்பினர்களும் தள்ளிவிடப்பட்டார்கள்.
எதிர்கட்சியினர் புகாரை கண்டுகொள்ளவில்லை: அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு போராடினோம். நாடாளுமன்ற வளாகத்தில் இப்படிப்பட்ட சூழல் தேவையில்லாமல் உருவாக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் மிரட்டலுக்கு உள்ளாக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியினருடன் காவல்துறையில் புகார் அளிக்கச் சென்றிருந்தோம். எதிர்கட்சியினர் அளித்த புகார் மீது இதுவரையில் முதல் தகவல் அறிக்கைகூட வழங்கப்படவில்லை. அமித்ஷா பேசியதை மாநிலங்களவையில் இருந்த அனைவரும் கேட்டனர். அதை யாரும் திரித்து கூற வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் அபாயகரமான கழிவுகள் கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் கொட்டப்படுவது குறித்து அங்கு இருப்பவர்களிடமும் பேசி இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்றார்.