சென்னை: சென்னையில் இருந்து விமான ஊழியர்கள் உட்பட 156 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திடீர் இயந்திர கோளாறால் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. 2 மணி நேரம் கழித்து கோளாறு சரி செய்யப்பட்டு விமானம் மீண்டும் அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது.
சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இருந்து 148 பயணிகள், ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 156 பேருடன் புறப்பட்டு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது.
அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானம் வானில் பறப்பது ஆபத்தானது என்பது உணர்ந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதோடு விமானத்தை ஓடு பாதையிலே அவசரமாக நிறுத்தினார்.
அதன் பின்பு இழுவை வண்டிகள் வந்து ஓடுபாதையில் நிறுத்தப்பட்ட விமானத்தை இழுத்துக் கொண்டு வந்து விமான ஓடுபாதையின் ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்தப்பட்டது. அதோடு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், விமான பொறியாளர்கள், குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தனித்தேர்வர்கள் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு!
இதையடுத்து விமானம் பொறியாளர்கள் குழுவினரால் சரி செய்யப்பட்டு 2 மணி நேரம் கழித்து விமான ஊழியர்கள் உட்பட 156 பயணிகளுடன் மீண்டும் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அந்தமான் புறப்பட்டு சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த துரித நடவடிக்கை காரணமாக ஆபத்து தவிர்க்கப்பட்டு, விமானத்திலிருந்த 148 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உட்பட 156 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.