சென்னை:நவம்பர் மாதம் வந்தாலே சென்னைவாசிகளுக்கு புயல் குறித்த அச்சம்தான். புயல் மையம் கொண்டுள்ள பகுதி, எந்த பகுதியில் கரையைக் கடக்கும் என்பது குறித்து அவ்வப்போது, செய்தி அறிவிப்புகளை கேட்ட வண்ணம் இருப்போம். இது மட்டுமல்ல 2004ம் ஆண்டு ஆழிப்பேரலைக்குப் பின்னர் முதல் கிழக்கு ஆசியாவில் எந்த நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி அச்சமும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
சரி, இந்த சுனாமி, புயல்களை எப்படி கணிக்கிறார்கள். சென்னைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என எப்படி விஞ்ஞானிகளால் உறுதியாக கூற முடிகிறது என்பதை எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதற்கு விடையளிக்கின்றனர் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய பெருங்கடல் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் (Ministry of Earth Science) கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்நிறுவனம், கடல் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்காெண்டு வருவதுடன், கடலின் தன்மையில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் மூலம் வானிலை மாற்றம், புவியியல் மாற்றம், புயல், சுனாமி போன்றவை ஏற்படுவதையும், கண்காணித்து வருகின்றது.
1996ஆம் ஆண்டு முதல் தேசிய தரவு மிதவை திட்டம் (National data buoy program) என்ற கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டது. இதன் முதன்மை நோக்கம் இந்திய கடற்பகுதியில், டேட்டா பாய்கள் எனப்படும் நங்கூரமிட்ட தரவு மிதவை கண்காணிப்பு அமைப்புகளை நிறுவி, அவற்றின் தகவல்களைப் பெற்று பராமரித்தல் ஆகும். இந்த தரவு மிதவைகளில் (Data Buoy ) வானிலை மற்றும் கடலில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்கும் உணரிகள் (Censors) பொருத்தப்பட்டிருக்கும்.
இது தொடர்பாக, தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் அறிவியலறிஞர் (Scientist In-charge Ocean Observations) எம்.அருள் முத்தையா ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், " 1997 முதல் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் பகுதியில் தரவு மிதவைகளை (Data Buoy ) நிறுவி, தரவுகளைப் பெற்று வருகிறோம். அரபிக்கடல், வங்காள விரிகுடா கடல் பகுதியில் 12 ஆழ்கடல் பகுதிகள் மற்றும் 3 கடலோரப் பகுதிகளிலும் இக்கருவிகள் உள்ளன.
இது தவிர சுனாமியை கண்டறிவதற்கு 7 இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன, இவற்றில் வங்காள விரிகுடா பகுதியில் 5 இயந்திரங்களும், 2 அரபிக்கடலிலும் நிலை நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் தரும் தகவல்களை பெற்று ஒசேன் இன்பர்மேஷன் சர்விஸ் (Indian National Center for Ocean Information Services) நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து வானிலை மையத்திற்கும், பிற துறைகளுக்கும் தகவல்கள் வழங்கப்படுகின்றன என்றார்.
ஆழ்கடலில் இருக்கும் கருவிகள் கரையில் இருக்கும் கட்டுப்பாட்டு மையத்துடன் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒரே வழி செயற்கைக் கோள்கள் மட்டுமே , 3 மணி நேரத்திற்கு ஒருமுறை இக்கருவிகளிலிருந்து தகவல்கள் செயற்கைக் கோள்களுக்கு அனுப்பப்படுகின்றன. இக்கருவிகள் கடலில் தடையின்றி செயல்படும் வகையில் 2 பேட்டரிகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை தயாரித்துக் கொள்ளும். ஒரு வேளை சூரிய ஒளி சோலார் பேட்டரிகள் இயங்காத பட்சத்தில் லித்தியம் அயன் பேட்டரி தானாகவே இயங்கத்துவங்கும் எனவும் அவர் கூறினார். ஓராண்டு வரையிலும் இந்த பேட்டரிகள் இயங்கு நிலையில் இருக்கும் என விஞ்ஞானி அருள் முத்தையா கூறுகிறார்.