சென்னை: ’கேம் சேஞ்சர்’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஷங்கரை, ராஜமௌலி பாராட்டியுள்ளார். வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில் ராஜூ தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’ (Game changer). தமன் இசையமைத்துள்ள ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.
தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் ரா மச்சா மச்சா, DHOP ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ராம் சரண் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வில்லன் கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக மிரட்டியுள்ளார்.
முன்னதாக எஸ்.ஜே.சூர்யா இந்த வருடம் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'இந்தியன் 2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ’இந்தியன் 3’ திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் ராஜமௌலி, “இந்த தலைமுறை இயக்குநர்கள் எங்களை பார்த்து பெருமைப்படுகின்றனர். ஆனால் நாங்கள் இயக்குநர் ஷங்கரை பார்த்து பெருமைப்படுகிறோம், அவர் தான் OG (Original gangster). அவர்தான் பிரமாண்ட பொழுதுபோக்கு படங்கள் எடுக்கும் இயக்குநர்களுக்கு OG” என பாராட்டியுள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் படங்களை இயக்கி தமிழ் சினிமாவை உலக அளவில் நிலை நிறுத்தியவர் இயக்குநர் ஷங்கர்.
இதையும் படிங்க: திரு.மாணிக்கம் திரைப்படம் ஒரு அற்புதமான படைப்பு - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு! - RAJINIKANTH
அவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ’சிவாஜி’ திரைப்படம் தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது. கடைசியாக ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், கேம் சேஞ்சர் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது. கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது.