கோயம்புத்தூர்:கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மதுக்கரை, போளுவாம்பட்டி, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய வனச்சரகங்கள் இயற்கை எழில் சூழலில் அமைந்துள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை, காட்டு மாடு, புள்ளி மான், புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் மற்றும் பிற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
ஏஐ மூலம் வனவிலங்குகளை விரட்டுவது தொடர்பான செய்தி தொகுப்பு (Credits - ETV Bharat Tamil Nadu) இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள், வனப் பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய விளை பொருள்களை சேதம் செய்து வருகின்றன. இதன் காரணமாக, ஒரு சில நேரங்களில் மனித - விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு விடுகின்றன.
யானைகளை விரட்ட ஏஐ தொழில் நுட்பம்:இதனை தடுப்பதற்காக கோவை மாவட்டம், காரமடை அடுத்துள்ள கெம்மராம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் தற்போது வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பமான ஏஐ (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதில் வெற்றி கண்டுள்ளது.
எப்படி செயல்படுகிறது?யானைகள் ஊருக்குள் நுழையும் இடத்தைக் கண்டறிந்து, அங்கு கண்காணிப்பு கேமராவுடன் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் 25 லட்சம் புகைப்படங்களைக் கொண்ட ஏஐ தொழில் நுட்பம் கொண்ட கோமரா இணைக்கப்பட்டுள்ளது.
கேமரா வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் வன விலங்குகளின் நடமாட்டம் தென்பட்டால், முதலில் கண்காணிப்பு கேமரா அந்த வனவிலங்கின் புகைப்படத்தை எடுத்து அதனை ஏஐ கேமராவிற்கும் அனுப்பும்.
இதனையடுத்து, அந்த வனவிலங்கு யானையா? அல்லது காட்டெருமையா என்பதை ஏஐ கேமரா மூலம் கண்டறிந்து, அதற்குத் தகுந்தார் போல் ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பும். இதற்காக ஆம்புலன்ஸின் சைரன் சத்தம், பழங்குடி இன மக்கள் எழுப்பும் ஒலியின் சத்தம், ஜேசிபி எந்திரத்தை இயக்கும்போது ஏற்படும் சத்தம் உள்ளிட்ட பல்வேறு சத்தங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வனவிலங்கு நடமாட்டம் குறைந்துள்ளது:சோதனை ஓட்டமாக நடைபெற்ற இந்த முயற்சி வெற்றி அடைந்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கூறுகையில், "நாளுக்கு நாள் ஊருக்குள் நுழையும் யானைகளால் விவசாயத்தைக் கைவிடும் நிலை உள்ளதாகக் கூறிய நிலையில், அதிகாரிகளின் ஆலோசனைப் படி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து சோதனை முறையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியபோது, யானைகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளது. இதனை எங்கள் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த முடிவு” செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
சாட்டிலைட் மேப்பிங்க்:இது குறித்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள பி ஜெண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகவேந்திர் கூறுகையில், "தமிழக வனத்துறையுடன் இணைந்து சோதனை அடிப்படையில் இதனை செயல்படுத்தியதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் 25 லட்சம் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளோம்.
யானை உள்ளிட்ட எந்த வகையான விலங்குகள் வந்தாலும் கேமராவில் சமிக்ஞை வரும், அவற்றை தொந்தரவு செய்யாத வகையில் ஒலிகள் இருக்கும். அடுத்த கட்டமாக கோவை மற்றும் வேலூரில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
விரைவில் சாட்டிலைட் மேப்பிங் மூலம் வன விலங்குகளின் தொடர்ச்சியான நகர்வுகளைக் கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை விரட்ட குறைந்த செலவில் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்க உள்ளோம். இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், மேலும் கேரளா மற்றும் கர்நாடகா, ஆந்திரப்பிரதேசத்திலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.
வன அலுவலர்:இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், “யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் இருளர்பதி கிராமத்தில் சோதனை முறையில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற தொழில்நுட்பம் மதுக்கரை வனச்சரகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முயற்சி நல்ல பலனைக் கொடுப்பதால், இன்னும் சில பகுதிகளில் 10 கி.மீ தொலைவிற்கு, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக” தெரிவித்தார்.
இதையும் படிங்க:காந்தி நினைவு அருங்காட்சியகத்தை அரசியல் களமாக மாற்றுவதா? - சமூக ஆர்வலர்கள் கொதிப்பு!