சென்னை: "உணவு எந்த பகுதியில் சுவையாக இருந்தாலும் அதை தேடி சென்று உண்ணும் பழக்கம் எனக்கு இருக்கிறது" என உற்சாகமாக கூறும் படப்பை வினோதினி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியின் பாரம்பரிய உணவான பனை ஓலை கொழுக்கட்டை சுவை தன்னை கவர்ந்ததாகவும், மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்து சப்பிடுவோம் என சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் உணவு திருவிழா குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்கவும், சத்தான ஆரோக்கியான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.20) தொடங்கி வைத்தார்.
வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வரும் உணவு திருவிழாவை ஆர்வத்துடன் காணவும், ஆசையுடன் உணவு உண்டு மகிழவும் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்து வருகின்றனர். "உணவு திருவிழாவில் உப்புக் கறி மற்றும் நவதானியத்த இட்லியுடன் மீன் குழம்பு சாப்பிட்டோம். மிகவும் சுவையாக இருந்தது" என ஈடிவி பாரத் ஊடகத்திடம், தான் உண்டு மகிழ்ந்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார் சென்னையை சேர்ந்த ஜெனி.
மனம் கவர்ந்த உணவு: தொடர்ந்து அவர் பேசுகையில், "அசைவ உணவுகள் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று உட்கொண்ட இறால் வடை மிகவும் சுவையாக இருந்தது. ஒவ்வொரு மாவட்டத்தின் உணவையும் ஒரே இடத்தில் உண்பது மகிழ்ச்சி. மீண்டும் இங்கே வந்து உணவு உட்கொள்வோம்" எனவும் வரகு பிரியாணி வித்தியாசமான உணவாக இருக்கும் என்று நினைக்கிறேன் அதை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். உணவின் விலையும் அனைவருக்கும் ஏற்ப இருப்பதாக கூறினார்.
உணவு வகைகள் என்ன?: உணவுத் திருவிழாவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த
- கோவை கொங்கு மட்டன் பிரியாணி,
- கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில்,
- கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி,
- நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன்,
- தருமபுரி ரவா கஜூர்,
- நீலகிரி ராகி களி – அவரை குழம்பு,
- திருப்பூர் முட்டை ஊத்தாப்பம்,
- காஞ்சிபுரம் கோவில் இட்லி,
- சிவகங்கை மட்டன் உப்புக்கறி,
- புதுக்கோட்டை சுக்குமல்லி காபி,
- ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி,
- வேலூர் ராகி கொழுக்கட்டை,
- மதுரை கறி தோசை,
- விருதுநகர் கரண்டி ஆம்லெட்,
- தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு,
- திருச்சி நவதானிய புட்டு,
- மயிலாடுதுறை இறால் வடை,
- நாகப்பட்டிணம் மசாலா பணியாரம்,
- கன்னியாகுமரி பழம் பொறி,
- சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் தயாரித்து 35 அரங்குகளில் வழங்கி வருகின்றனர். டிசம்பர் 20ம் தேதி தொடங்கிய உணவு திருவிழா டிசம்பர் 24ம் தேதியன்று முடிவடைகிறது. மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை உணவு திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவும் புதுமையும்: படப்பையில் இருந்து உணவு திருவிழாவை காண குடும்பத்துடன் வருகை தந்த வினோதினி கூறுகையில்," இங்கு இருக்கும் உணவு அனைத்தும் சுவையாக இருக்கிறது. குறிப்பாக பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை மிகவும் புதுமையாகவும் சுவையாகவும் இருந்தது. இப்பொழுது தான் இதை பார்க்கிறேன். அதன் சுவையும் மிகவும் அருமையாக இருக்கிறது. ஓலையில் வைத்து கொழுக்கட்டை செய்யும் பொழுது அந்த பனை ஓலையின் வாசத்துடன் கொழுக்கட்டையின் சுவை நன்றாக இருந்தது. மீண்டும் இங்கு குடும்பத்துடன் வந்து உணவு உட்கொள்ள முயற்சிப்போம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காய்கறிகளை இனிமே இப்படி பார்த்து வாங்குங்க..ஒரு வாரமானாலும் கெடாமல் இருக்கும்!
உணவு திருவிழா- நல்ல முயற்சி: "இந்த உணவு திருவிழாவில், உண்பதற்கு ஒரு இடமும், வாங்குவதற்கு ஒரு இடமும் என தனித்தனியாக இருப்பதால் கூட்ட நெரிசலை குறைக்க முடிகிறது. இது நல்ல முயற்சி" என்கிறார் சென்னையை சேர்ந்த மதுமதி.
ஆரோக்கியத்தில் கவனம்: உணவு திருவிழாவில், எண்ணெய் மற்றும் அடுப்பு இல்லா முறையில் உணவு தயாரித்துக் கொடுத்து வரும் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை மகளிர் குழு வள்ளி நாயகி கூறுகையில், "இயற்கையான பச்சை காய்கறிகளை பாரம்பரிய முறையில் இந்து உப்பில் வேக வைத்து கொடுக்கிறோம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
சுகர்,பிரஷர் உள்ளவர்களும் இதை தாராளமாக உட்கொள்ளலாம், உடல் எடை குறைவுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ளலாம். குறிப்பாக யானை அரிசி, குள்ள கார அரிசி, கருப்பு கவுனி அரிசி, சிறு தானியங்கள் என 34 வகை தானியங்களைக் கொண்டு லெமன், புளி, தயிர் சோறு செய்கிறோம். காய்கறிகளில் சாலட் செய்து கொடுக்கிறோம்.குறிப்பாக பச்சைப்புளி ரசம், மோர், சாம்பார் அனைத்தும் எந்த பச்சை வாசனை வராமல் செய்து கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.