சென்னை: சென்னை, பம்மல் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுல் (24). கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு (24). விஷ்ணு மேற்கு மாம்பலத்தில் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், இருவரும் வார இறுதி நாளை கொண்டாட பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் ஆறாவது தெருவில் வசித்து வரும் அஜேஷ் என்பவர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் குடிப்பதற்கு மது இல்லாததால், மது வாங்க கேடிஎம் பைக்கில் நள்ளிரவில் பள்ளிக்கரணை அருகே உள்ள 200 அடி சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் விற்பனை செய்து வந்த மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வேளச்சேரி-மேடவாக்கம் பிரதான சாலையில் இருவரும் அதிவேகமாக சென்றுள்ளனர்.
அப்போது பள்ளிக்கரணை குளம் அருகே அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தபோது, சென்டர் மீடியனில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு, பின்னர் மின் கம்பத்தில் மோதி இருவரும் எதிர் திசையில் உள்ள சாலையில் விழுந்தனர். இதில் கோகுல் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணு நெஞ்சு பகுதியில் பலத்த காயங்களுடன் அதே இடத்தில் உயிர் இழந்தார்.
இதையும் படிங்க: சேலம் அதிமுக சேர்மன் கார் மோதி காவலாளி பலி... கலெக்டருக்கு பி.டி.ஓ அறிக்கை தாக்கல்..!
சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் தலை துண்டாகி விபத்தில் உயிரிழந்த கோகுல் மற்றும் விஷ்ணு உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து நடந்த இடத்திலிருந்து பள்ளிக்கரணை பிரதான சாலையில் சுமார் 200 மீட்டருக்கு அந்த கேடிஎம் இரு சக்கர வாகனம் தனியாக சென்றுள்ளது. சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மது போதையில் இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் தலை துண்டாகியும், மற்றொருவர் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பலியான சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.