திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 'அண்ணனுடன் ஆயிரம் பேர்' சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
கேரளா மருத்துவ கழிவு:
அப்போது அவர் கூறுகையில், ''15, 20 ஆண்டுகளாக கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து நாம் கட்சியை சார்ந்தவர்கள் தடுத்து வருகின்றனர். இவ்வளவு சோதனை சாவடியை தாண்டி இந்த கழிவுகள் எப்படி வருகிறது. என்னுடைய வளங்களை வெட்டி எடுத்து அவர்களின் குப்பைகளை கொட்டுகின்றனர். நீ 'கடவுளின் தேசம்' (கேரளா) என்றால் நாங்க கண்றாவி தேசமா?'' என சீமான் கேள்வி எழுப்பினார்.
இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை
தொடர்ந்து பேசிய சீமான், இஸ்லாமியர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. ஆனாலும் அவர்களின் நலனுக்காக போராடி வருகிறேன். திமுகவின் சாதனைகளை போர் பரணி பாட வேண்டும் என செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக பாட இருக்கும் போர் பரணியை கேட்க நானும் ஆவலாக உள்ளேன்.
ஒரு பக்கம் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என போராட்டம், மற்றொரு பக்கம் சட்ட ஒழுங்கு பிரச்சனை நிறைந்து காணப்படும் இந்த சமூகத்தில் அவர்கள் என்ன போர் பரணி பாட இருக்கிறார்கள் என்பதை கேட்க இருக்கிறேன். இதுவரை இருந்த முதல்வர்களில் மிக மோசமான முதல்வர் ஸ்டாலின் தான்.
கூட்டணியை விரும்புவோருக்கு எதற்கு தனி கட்சி
எட்டு வழி சாலை, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதன் காரணமாக தான் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து நின்று போராடுகிறோம். கூட்டணியை விரும்புபவர்கள் எதற்காக தனித்தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும்.
முருகன் கோவில் உண்டியல்
சென்னை திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாக விழுந்த விலை உயர்ந்த ஐபோனை திருப்பி தர முடியாது என இந்து சமய அறநிலையத்துறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. ஒரு வேளை உண்டியலில் வெடிகுண்டை தூக்கி போட்டு இருந்தால் என்ன செய்திருப்பார்கள். உண்டியலில் விழுந்த குண்டு எங்களுக்குத்தான் என்று சொல்வார்களா?
விஜய் எனது தம்பி
ஆயிரம் இருந்தாலும் விஜய் எனது தம்பி. அவரை இதில் இழுத்து விடாதீர்கள். ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள். திமுகதான் எனது எதிரி.
இஸ்லாமியர்களுடைய வாக்குகளை பெறுவதற்காக நீங்கள் முயற்சி செய்வதாக அண்ணாமலை கூறுகிறாரே?
இஸ்லாமியர் ஓட்டுக்களை பெறுவதற்காகவே நாங்கள் பாட்ஷாவிற்கு ஆதரவாக பேசுகிறோம் என்று அண்ணாமலை கூறுகிறார். அவர் யாருடைய ஓட்டை பொறுக்குவதற்காக கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்? இஸ்லாமியர்கள் ஒருபோதும் எனக்கு வாக்களித்ததில்லை. அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதில்லை. எனக்கு உடன் பிறந்தார்கள் என்ற எண்ணத்திலேயே அவர்களுடன் உறவு பாராட்டுகிறேன்.
அவர்களுடைய ஐந்து கடமைகளில் ஆறாவது கடமையாக, திமுகவுக்கு வாக்களிப்பதையே தீர்மானமாக வைத்திருக்கின்றனர். அவர்களது இறைத்தூதரே வந்து சொன்னால் கூட அவர்கள் திமுகவிற்கு வாக்கு செலுத்துவதை விட மாட்டார்கள்.
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியா?
ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவோம். தனித்து போட்டியிடுவோம். திமுக சார்பில் அங்கு இடைத்தேர்தலில் பணியாற்றக்கூடிய செந்தில் பாலாஜியை பார்த்து நாங்கள் பயப்படுவதற்கு அவர் என்ன ஆரியப்படை வீரரா? பணம் கொடுத்தால் தான் திமுகவினர் தேர்தல் வேலைகளை செய்வார்கள். அப்படி இருக்கையில் நாங்கள் ஏன் அவரைப் பார்த்து பயப்பட வேண்டும்'' என சீமான் கூறினார்.