சென்னை: சென்னையில் கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், அதனை தடுக்க காவல்துறை பல்வேறு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், போதை பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் சென்னையில் அதிக அளவிலான போதை பொருட்களை பதுக்கி வைத்து, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டு இருப்பதாக சென்னை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மாதவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் பூபாலன் தலைமையில் தனிப்படை அமைத்து போதை பொருள் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் மாதவரம் பகுதியில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களின் நடமாட்டம் இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், கடந்த 20 ஆம் தேதி மாதவரம் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாதவரம் ரோஜா நகர் பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற 2 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் 1. 1/2 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் இருந்தது தெரிய வந்தது.
17 கிலோ மெத்தமட்டமைன்
உடனடியாக மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்த போலீசார் அதனை எடுத்து வந்த வெங்கடேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது.
கைதான இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த சுல்தான், லாரன்ஸ், சாகுல் ஹமீது, சரத்குமார் மற்றும் ஜான்சி ஆகியோர் உட்பட 10 பேரை அடுத்தடுத்து கைது செய்து தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புழல் சிறையில் இருந்த கார்த்திக்கை விசாரணைக்கு எடுத்து தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை செய்தனர். விசாரணையில் மியான்மர் நாட்டில் இருந்து மெத்தபெட்டமைன் போதை பொருளை மணிப்பூர் மாநிலம் வழியாக சென்னைக்கு கொண்டு வந்து பதுக்கி வைத்து அதனை பிரித்து சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்ததும், மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட சுமார் 17 கிலோ மெத்தமட்டமைன் போதை பொருளை விநியோகம் செய்வதற்காக மாதவரம் பகுதியில் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
3 தனிப்படைகள்
உடனடியாக மாதவரம் ரோஜா நகர் பகுதிக்கு விரைந்த போலீசார் அங்குள்ள வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.16 கோடி மதிப்பிலான 17 கிலோ மெத்தமட்டமைன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தல் கும்பலில் இதுவரை பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கடத்தல் கும்பலுடன் யார்? யார்? தொடர்பில் இருந்தார்கள்? கைதான கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வேறு ஏதேனும் இடங்களில் போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா என்ற கோணத்தில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தொடர்ந்து போதை பொருட்களின் புழக்கம் சென்னையில் அதிகரித்து வருவதால் போதை பொருட்களை கையாளும் மையமாக சென்னை மாறி வருகிறதா? என்ற அச்சத்துடன் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
டிடிவி தினகரன் பதிவு
இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், '' சென்னை மாதவரம் அருகே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்த 16 கிலோ மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
கடந்த வாரம் மணிப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதே மாதவரத்தில் மேலும் 16 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் போதைப்பொருட்கள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு ஊடுருவியிருப்பதையே வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் தீர விசாரித்து, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்துகிறேன்'' என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.