உலகளவில் வீடியோ ஸ்டிரீமிங் தளத்தின் அரசனாகத் திகழ்ந்துவரும் யூடியூப், அதன் அடிப்படை பயனர்களைக் கவர புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்கிறது. இதனை சாத்தியமாக்க தாய் நிறுவனமான கூகுள், ஜெர்மனி, தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், யூடியூப் பிரீமியம் லைட் சந்தா (Youtube Premium Lite subscription) திட்டத்தை சோதனை செய்து வருகிறது.
எப்போதும் காணொளிகளின் (வீடியோக்களின்) நடுவே பெரிய விளம்பரங்கள் வருவது தான் பயனர்களுக்கு பிரச்சினையாக இருந்தது. விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப் வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால், சந்தா செலுத்தி பிரீமியம் திட்டங்களைப் பெற வேண்டும்.
தற்போது இந்த பிரீமியம் சந்தாவை செலுத்த முடியாத மக்களுக்காக லைட் திட்டத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, பிரீமியம் திட்டத்தின் பாதி விலையை செலுத்தி, ‘யூடியூப் பிரீமியம் லைட்’ சந்தா திட்டத்தைப் பெற முடியும். லைட் சந்தாதாரர்களுக்கு குறைந்த அளவிலான விளம்பரங்கள் மட்டுமே காட்டப்படும் என இதன் பீட்டா சோதனை பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தகவல் தெரிவித்துள்ளனர்.
யூடியூப் பிரீமியம் லைட் சந்தா எவ்வளவு?
இன்ஸ்டாகிராம் திரெட்சில் ‘jonahmanzano’ எனும் பயனர் இது தொடர்பாக ஒரு படத்துடன் பதிவிட்டுள்ளார். அதன்படி, YouTube பிரீமியம் லைட் ஒரு மாதத்திற்கு 8.99 டாலர்கள் செலவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது 16.99 டாலர்கள் என்ற வழக்கமான பிரீமியம் திட்டத்தை விட கிட்டத்தட்ட 50 விழுக்காடு மலிவானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், யூடியூப் பிரீமியம் லைட் வருடாந்திர சந்தா திட்டமாக கிடைக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தவில்லை.