ஹைதராபாத்:வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும் போது விமானம் மூலமாகவே செல்வார். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக போலந்தில் இருந்து 'ரயில் ஃபோர்ஸ் ஒன்' (Rail Force One) என்ற சிறப்பு ரயிலில் சுமார் 10 மணி நேரம் பயணம் செய்து உக்ரைனுக்குச் சென்றுள்ளார். உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் சுமார் ஏழு மணி நேரம் மட்டுமே இருக்கப் போகும் பிரதமர் மோடி, இந்த 20 மணி நேர ரயில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்றால் அதற்கான காரணம் இருக்கிறது.
மோடியின் ரயில் பயணத்திற்கான காரணம்: ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் விமானம் இயக்கப்பட்டால் அது பாதுகாப்பானதாக இருக்காது என்ற காரணத்தாலேயே பிரதமர் மோடி ரயில் மூலம் உக்ரைன் சென்றுள்ளார். மேலும், இந்த 'ரயில் ஃபோர்ஸ் ஒன்' பிற ரயில்களைப் போல சாதாரணமான ரயில் அல்ல. இது ஆடம்பர வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த சேவைக்கு பெயர் பெற்ற டீசல் என்ஜின் கொண்ட ரயிலாகும்.
ரயில் போர்ஸ் ஒன்: இந்த ரயில் முதலில் கிரிமியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், கிரிமியாவை ரஷ்யா இணைத்த பிறகு, தற்போது அவை உலகத் தலைவர்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. உக்ரைனுக்குச் செல்லும் பெரும்பாலான உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் தூதர்கள் இந்த ரயில் ஃபோர்ஸ் ஒன் மூலம் மட்டுமே பயணம் செய்கிறார்கள்.
தண்டவாளத்தில் செல்லும் சொகுசு ஹோட்டல்: இந்த ரயில் ஃபோர்ஸ் ஒன் இரவில் மட்டுமே இயக்கப்படும், மெதுவாக செல்லக்கூடிய சொகுசு ரயிலாகும். போலந்திலிருந்து கீவ் வரையிலான 600 கி.மீ தூரத்தைக் கடக்க 10 மணி நேரம் ஆகும். இதன் உள்ளே இருக்கும் வசதிகளைப் பார்க்கும் போது இதை ரயில் என நம்புவதே கடினம். ஏனெனில், இந்த ரயில் தண்டவாளத்தில் நகர்ந்து செல்லும் சொகுசு ஹோட்டல் போல் உள்ளது.