தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

இஸ்ரோவுடன் இணைந்து உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 'செமிகண்டக்டர் சிப்'பை உருவாக்கி சாதனை படைத்த சென்னை ஐஐடி! - SEMICONDUCTOR EXPERTISE IS IN INDIA

சென்னை ஐஐடி, இஸ்ரோவுடன் இணைந்து 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் விண்வெளித்தரத்தில் செமிகண்டக்டர் சிப்பை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி (Image credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2025, 1:19 PM IST

Updated : Feb 11, 2025, 7:15 PM IST

சென்னை: உலகின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது மெட்ராஸ் ஐஐடி. இங்கு பயிலும் மாணவர்கள் வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இந்த நிலையில், ஆத்ம நிர்மான் என்று அழைக்கப்படும் அனைத்துத் துறைகளிலும் இந்தியா தன்னிறைவு அடையும் திட்டத்தின் கீழ், இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி தரத்திலான செமிகண்டக்டரை உருவாக்கி சென்னை ஐஐடி புதிய சாதனை படைத்துள்ளது.

சென்னை ஐஐடி கணினி அறிவியல், பொறியியல் துறையின் பிரதாப் சுப்பிரமணியம் டிஜிட்டல் நுண்ணறிவு - பாதுகாப்பான வன்பொருள் கட்டிடக்கலை மையத்தில் (PSCDISHA) ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தலைமையில் சக்தி மைக்ரோபிராசசர் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விண்வெளித் தரத்தில் செமிகண்டக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

சக்தி அடிப்படையிலான செமிகண்டக்டர் சிப் (Image credits-ETV Bharat Tamil Nadu)

செமிகண்டக்டர் முயற்சியை நாட்டிற்கு முக்கியமானதாக மாற்றும் நடவடிக்கையின் பலனாக, இது முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது. ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் இது திகழ்கிறது. ஐஐஎஸ்யு என அழைக்கப்படும் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோவின் இன்னர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட்டில் உருவாக்கப்பட்டு, சென்னை ஐஐடி மூலம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. எஸ்சிஎல் என அழைக்கப்படும் சண்டிகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டு, கர்நாடகாவின் பெர்ஜெனஹள்ளியில் அமைந்துள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மூலம் தொகுக்கப்பட்டது. குஜராத்தின் பிசிபி பவர் (PCB Power) நிறுவனம் தயாரித்த மதர்போர்டு பிசிபி (பிரிண்டட் சர்க்யூட் போர்டு), சென்னையின் சிர்மா எஸ்ஜிஎஸ் (Syrma SGS) நிறுவனத்தில் அசெம்பிள் செய்யப்பட்ட பின், சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட மென்பொருள் ஆகியவற்றுடன் சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக ‘பூட்’ செய்யப்பட்டது.

ஐஐடி இயக்குநர் காமகோடி பிரத்யேக பேட்டி (ETV Bharat Tamilnadu)

ஐஐடி இயக்குநர் காமகோடி

இந்தப் புதிய மைக்ரோ பிராசசரின் முக்கியத்துவத்தை விளக்கி, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, “2018-ல் RIMO, 2020-ல் MOUSHIK க்குப் பிறகு, எஸ்சிஎல் சண்டிகரில் நாங்கள் தயாரித்து சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக தொடங்கிய மூன்றாவது ‘சக்தி’ சிப் இதுவாகும். சிப் வடிவமைப்பு, சிப் உற்பத்தி, சிப் பேக்கேஜிங், மதர்போர்டு வடிவமைப்பு- உற்பத்தி, அசெம்பிளி, மென்பொருள், பூட் - அனைத்தும் இந்தியாவிற்குளேயே மேற்கொள்ளப்பட்டது. முழுமையான செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பு- நிபுணத்துவம் நம் நாட்டிற்குள்ளேயே இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துவம் வகையில் இது அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:வந்தே பாரத் சிலீப்பர் ரயில்: தூங்கும் வசதியுடன் அதிவேகப் பயணம்!

இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்தக் கூட்டு முயற்சியைப் பாராட்டிய இஸ்ரோவின் தலைவர் வி. நாராயணன், “சென்னை ஐஐடியின் சக்தி பிராசசரை அடிப்படையாகக் கொண்ட ஐஐஎஸ்யூவால் உருவாக்கப்பட்ட ஐஆர்ஐஎஸ் கண்ட்ரோலரை இந்தியாவில் முழுமையாக வெற்றிகரமாக உருவாக்க முடிந்தது ஒரு மகிழ்ச்சியான தருணம். செமிகண்டக்டர் வடிவமைப்பு- உற்பத்தியில் மேக் இன் இந்தியா முயற்சிகளில் உண்மையிலேயே இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அனைத்து குழுக்களையும், குறிப்பாக பத்மகுமார் தலைமையிலான ஐஐஎஸ்யூ குழுவையும், பேராசிரியர் வி. காமகோடி தலைமையிலான சென்னை ஐஐடி குழுவையும் வாழ்த்துகிறேன். எங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்த உயர் செயல்திறன் கண்ட்ரோலர், விண்வெளிப் பயணத்துக்கான எதிர்கால உட்பொதிக்கப்பட்ட கண்ட்ரோலர்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன். இந்தக் கண்ட்ரோலரை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு ஒன்றை விரைவில் விண்வெளிப் பயணத்தில் சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இதன் வாயிலாக இதன் செயல்திறன் மேலும் உறுதிப்படுத்தப்படும்” என்றார்.

ஜெனரல் கமல்ஜித் சிங்

சக்தி வகை சிப்-களின் மூன்றாவது தொடர்ச்சியான வெற்றி குறித்து கருத்து தெரிவித்த எஸ்சிஎல் சண்டிகரின் இயக்குநர் ஜெனரல் கமல்ஜித் சிங். “IRIS-LV பிராசசரின் வெற்றிகரமான வளர்ச்சியில் சென்னை ஐஐடி, எஸ்ஆர்ஓ ஆகியவற்றுடன் எஸ்சிஎல் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறது. IRIS-LV பிராசசர் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். மாஸ்க் பிரேம் வடிவமைப்பு, ஜிடிஎஸ் தயாரிப்பு- சோதனை ஆகியவற்றை உள்ளடக்கிய எஸ்சிஎல்-ன் 180 என்எம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. சிலிக்கான் வடிவமைப்பு சரிபார்ப்புக்குப் பிந்தைய- வேஃபர் மட்டத்தில் விரிவான மின்சோதனை எஸ்சிஎல்-ல் சென்னை ஐஐடி குழுவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. சிறந்த தயாரிப்புகளை உருவாக்கவும் ஆத்மநிர்பர் பாரதத்தை எளிதாக்கி சாதனைகளைப் படைக்கவும் கல்வியாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் எஸ்சிஎல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Last Updated : Feb 11, 2025, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details