ஹைதராபாத்:ஆப்பிள் நிறுவனம் இன்று (செப்டம்பர் 9) ‘இட்ஸ் குளோடைம்’ (It's Glowtime) எனும் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுவதால், டெக் விரும்பிகள் பலரும் இந்த நிகழ்விற்காகக் காத்திருக்கின்றனர். இந்நிகழ்வில், ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, நான்காம் தலைமுறை ஏர்பாட்ஸ், ஐஓஎஸ் 18 இயங்குதளம் ஆகியவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஆப்பிள் நிர்வகிக்கும் ‘இட்ஸ் குளோடைம்’ நிகழ்வை எப்படி நேரலையில் காண்பது, ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன விலையில் அறிமுகமாகும், புதிய அப்டேட்டுகள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்
ஆப்பிள் ‘இட்ஸ் குளோடைம்’ நிகழ்வு (Apple Event 2024)
ஆப்பிள் ‘It's Glowtime’ நிகழ்வு செப்டம்பர் 9 அன்று அமெரிக்காவின் கலிபோர்னியா நேரப்படி காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்தியாவில், செப்டம்பர் 9 ஆம் தேதி இரவு 10:30 மணி முதல் ஆப்பிள் 2024 நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், யூடியூப் சேனல், ஆப்பிள் டிவி ஆப்ஸ் வாயிலாகவும் நிகழ்வை நேரலையில் பார்க்கலாம். கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் இந்த நிகழ்வை நடத்துகிறது. இந்த இடம் ஆப்பிளின் முக்கிய வெளியீடுகளுக்கான இடமாகவும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான மையமாக செயல்படுகிறது.
என்னென்ன அறிமுகம் செய்யப்படுகிறது?
மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபோன் 16 சீரிஸ் இந்த நிகழ்வில் வெளியாகிறது. அதில் அடிப்படை மாடலான ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அடங்கும். அதுமட்டுமில்லாமல், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனுடன் நான்காம் தலைமுறை ஏர்பாட்ஸ் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் ஐஓஎஸ் 18 இயங்குதளத்தையும் ஆப்பிள் அறிமுகம் செய்கிறது.