தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர்- கல்யாண சுந்தரி தம்பதியினர். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் அண்ணாதுரை (30) மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.
அண்ணாதுரை கடந்த வாரம் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மூலம் கொச்சியிலிருந்து குஜராத் போர்பந்தர் கடல் பகுதியில் தங்கி மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மீன் பிடிப்பதற்கு வலை வீசும்போது அண்ணாதுரை தவறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அண்ணாதுரை உடன் மீன் பிடிக்க சென்றவர்கள் கடலில் குதித்து அண்ணாதுரையை தேடி உள்ளனர்.
நீண்ட நேரம் தேடியும் அண்ணாதுரை கிடைக்காததால் இது தொடர்பாக அவரது குடும்பத்திற்கு அண்ணாதுரை பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் பெர்க்னெட் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த அண்ணாதுரையின் பெற்றோர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.
இதையும் படிங்க : தேனியில் லாரி மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து..சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு!
தற்போது வரையில் கடலில் விழுந்த அண்ணாதுரையை தேடி வருவதாக குஜராத் அதிகாரிகள் கூறியதாக மீன் பிடிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் அண்ணாதுரையின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை கடலில் தவறி விழுந்த அண்ணாதுரை நிலை என்ன ஆனது என்று தெரியாமல் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தவித்து வருகின்றனர். மேலும், அண்ணாதுரையை விரைவில் கண்டுபிடித்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அண்ணாதுரை மனைவி கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை எனக்கு போன் வந்தது. உங்களது கணவர் கடலில் மீன்பிடிப்பதற்காக வலையை வீசும் போது தவறி கடலில் விழுந்ததாக கூறினர். 4 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் கிடைக்கவில்லை. நிறுவனத்திடம் கேட்டால் தேடிட்டு தான் இருக்கிறோம் என கூறுகிறார்கள். எனக்கு சீக்கிரமாக எனது கணவரை கண்டுபிடித்து தாருங்கள் என தெரிவித்தார்.
இதுகுறித்து உறவினர் திருமணி முருகன் கூறுகையில், கடலில் தவறி விழுந்தவரை தேடிட்டு இருக்கோம் என சொல்கிறார்கள். 4 நாட்களாகியும் இன்னும் கிடைக்கவில்லை. இதில் அரசு தலையீட்டு கூடிய விரைவில் அண்ணாதுரையை கண்டுபிடித்து தர வேண்டுமென கேட்கிறோம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்