சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சென்னை கொளத்தூரில் இயங்கி வரும் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர், தட்டச்சர், காவலர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப கடந்த 2021ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து, அலுவலக உதவியாளர் பணிக்கு இஸ்லாமியரான சுஹெய்ல் என்பவர் விண்ணப்பம் செய்தார். அதை பரிசீலித்த அறநிலையத்துறை இணை ஆணையர் விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, இணை ஆணையரின் உத்தரவை எதிர்த்து சுஹெய்ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், "பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர் என்பதற்காக தனக்கு வேலை மறுக்கப்படுவது அரசியல் அமைப்புக்கு எதிரானது. இந்துக்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பது, அறநிலையத்துறை பணிக்கு மட்டுமே பொருந்தும், கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது. அதனால், என்னை பணியில் சேர்க்க அனுமதிக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பணத்தை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தியதாக வழக்கு: தேசிய புலனாய்வு முகமை பதிலளிக்க உத்தரவு!
இந்த மனு நீதிபதி விவேக் குமார் சிங் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அறநிலையத்துறை நேரிடி கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனத்தில் பிற மதத்தவரை சேர்க்க முடியாது என விதி உள்ளது" என்று குறிப்பிட்டார்.
இதனை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி விவேக் குமார் சிங், "கல்வி நிறுவனம் தமிழக அரசால் நடத்தப்படவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாணவர்கள் கல்விக் கட்டணத்தில் இயங்கி வருகிறது. அதனால், அறநிலையத்துறை விதி 10ன் படி இந்து மதத்தை சேர்ந்தவரை மட்டுமே கல்லூரி பணியிடத்தில் நியமிக்க முடியும் எனவும், இதுமட்டும் அல்லாது பணியில் சேரும் போது இந்துவாக இருந்து, பின்னர் வேறு மதத்தை அவர் பின்பற்றினால் இந்த பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது" எனவும் உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்