நீலகிரி: இந்தியா குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை மறுநாள் (நவ.27) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வருகை புரிந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை தீட்டுக்கல் பகுதிக்கு வந்தடையும் அவர், உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் 3 நாட்கள் தங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து, 28ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று அங்கு இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பின்னர், மீண்டும் மாலை உதகை ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது துவக்கம்? - சபாநாயகர் அப்பாவு தகவல்!
அதற்கு மறுநாளான 29ஆம் தேதி பழங்குடியினர் மக்களை அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார். அதன் பின்னர், 30ஆம் தேதி உதகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். அதன் தொடர்ச்சியாக, திருச்சியில் இருந்து திருவாரூர் சென்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்திய குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் ராணுவம் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாளை மறுநாள் (நவ.27) உதகைக்கு குடியரசு தலைவர் வருகை தர உள்ள சூழலில் இன்று (நவ.25) உதகை தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்