திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (28). இவர் மணவாள நகர் எம்ஜிஆர் நகரில் உள்ள தனது அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வெங்கத்தூர் ஏரிக்கரை ஓரத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் சதீஷ் மற்றும் அவரது நண்பர் முரளி ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மது அருந்தியுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை வெங்கத்தூர் ஏரிக்கரை அருகே சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் சதீஷ் உடல் கிடந்துள்ளது. அதைக் கண்ட பொதுமக்கள் மணவாள நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, வெட்டுக் காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த முரளி என்பவரை மீட்டு, உடனடியாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் அழகேசன், ஆய்வாளர் ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர்.