தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. வெளியான அதிரடி அறிக்கை! - AADHAV ARJUNA

விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா
விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனா (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 12:07 PM IST

Updated : Dec 9, 2024, 12:26 PM IST

சென்னை:சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியிட்டு விழா டிச.06ஆம் தேதி மாலை நடைபெற்றது. அதில், அந்நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும் பெற்றுக்கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், “ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என கேட்பதில் என்ன தவறு? இங்கு தேர்தல் வாக்கு சார்ந்து தான் அரசியல் நடக்கிறது என கூறியிருந்தார்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன், ஆதவ் அர்ஜுனாவிடம் விளக்கம் கேட்கப்படும். மேலும் இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பதமும் இல்லை. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது விசிகவின் தலைவர் திருமாவளவன் ஆதவ் அர்ஜுனாவை விசிகவில் இருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரியவந்தது. இதுகுறித்து டிசம்பர் 7ஆம் தேதி அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும் அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால், கட்சியின் நலன்கள் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும், அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும், நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு “தவறான முன்மாதிரியாக” அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.

இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜுனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "நெஞ்சில் குடியிருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் காலி செய்யலாம்"- ஐ.லியோனி கிண்டல்!

Last Updated : Dec 9, 2024, 12:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details