சென்னை: ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ மூன்று முறை அவரது ட்விட்டரில் பதிவானது, திமுக மற்றும் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், இன்று திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது; ''அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த முதல்வருக்கு விசிக சார்பில் பாராட்டு தெரிவித்தோம். இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து பல ஆயிரம் கோடி முதலீடுகளை முதலமைச்சர் ஈர்த்துள்ளார். விசிக சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது.
அந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் அரசு மதுபான கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும் அரசியலமைப்பு சட்டம் உறுப்பு எண் 47ன் படி படிப்படியாக மதுவிலக்கை இந்திய அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் வைக்கப்படும். அந்த மாநாட்டிற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தோம்.
இதையும் படிங்க; 'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு'.. திருமாவளவன் கருத்துக்கு ஜி.கே.வாசன் கூறிய பதில் என்ன?
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் வரிசையில் திமுக தலைவர் ஸ்டாலினும் மதுவிலக்கில் உறுதியாக இருந்து ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். அக்., 2 இல் நடக்கவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் டி.கே. எஸ் இளங்கோவன் கலந்து கொள்வார்கள் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை பற்றி முதலமைச்சர் ஏதும் கேட்கவில்லை. அது 1990-களில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பேசி வரும் கருத்து. முன்பு பேசிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது. அந்த கருத்தினை எப்போதும் பேசுவோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எந்த விரிசலும், நெருடலும் இல்லை.
தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், கைம்பெண்கள் கண்ணீர் சிந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை முன்னுறுத்தி தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதை அரசியலோடு, பிணைத்து திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று திருமாவளவன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்