-சீனிவாசன் சுப்பிரமணியம், கோயம்புத்தூர்
கோயம்புத்தூர்: சின்னத்தம்பி...35 வயதான யானையின் பெயர் இது. கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், ஆனைக்கட்டி, மாங்கரை ஆகிய வனப்பகுதிகள் மற்றும் கிராமங்களில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த யானை இது. சின்னத்தம்பி யானையின் சேட்டைகள் மற்றும் செயல்பாடுகளுக்காக அன்றைய காலத்தில் ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே இருந்தது. சின்னத்தம்பியின் குறும்புகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அன்றைய ஊடகங்களில் வைராலாகி வலம் வந்தன. இருப்பினும், இந்த குறும்புக்கார சின்னத்தம்பி விளை நிலங்களையும், பயிர்களையும் சேதப்படுத்தவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2019-ம் ஆண்டு சின்னத்தம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் போது உடன் இருந்த பெண் யானையும் அதன் குட்டியும் விட்டு விலகாமல் பாசப்போராட்டம் நடத்தின. இந்த சம்பவம் அன்று அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம் பெற்றது.
இந்த நிலையில், ஒரு காலத்தில் தடாகம், ஆனைக்கட்டி, மாங்கரை உள்ளிட்ட பகுதிகளை கலக்கிய சேட்டைக்கார சின்னத்தம்பி தற்போது மீண்டும் இதே பகுதிக்கு திரும்பி வந்துள்ளது. ஆனால், இந்த முறை கும்கியாக, அன்று தன்னை விரட்டிவிட்ட மக்களை காப்பதற்காக திரும்பி வந்துள்ளது. தன்னை பிடித்த போது விட்டு விலகாமல் பாசப் போராட்டம் நடத்தியபோது 10 வயதாக இருந்த குட்டி யானையை வனப் பகுதிக்குள் விரட்ட தற்போது சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.
பெரிய தடாகம், சின்ன தடாகம், மருதமலை பகுதிகளில் பெரியதம்பி, சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய மூன்று ஆண் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களில் உணவுத் தேடி வருவதை வழக்கமாக கொண்டிருந்தன. இந்த நிலையில், 2007ஆம் ஆண்டு பெரியதம்பி என்ற யானை, சுமார் 30 கி.மீ தூரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சத்தியமங்கலம் சாலையில் மக்கள் வாழும் சரவணம்பட்டி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.
இதனால், வனத்துறையினர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தெங்குமரஹடா வனப்பகுதியில் விட்டனர். இதற்கு பின்னர் சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகளும் மாலை நேரங்களில் அவ்வபோது செங்கல் சூளைகளுக்கு தண்ணீர் தேடியும், உணவு தேடியும் வந்து, பயிர்களை சேதப்படுத்தின. இதனால் இந்த இரண்டு யானைகளையும் வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என விவசாயிகள் அப்போது தொடர் போராட்டங்கள் நடத்தினர்.
2018ஆம் பிடிக்கப்பட்ட யானை: இதன் எதிரொலியாக 2018ஆம் ஆண்டு விநாயகன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் விட்டனர். அதன் பின்னரும் விவசாய பயிர்களை சின்னத்தம்பி யானை சேதப்படுத்துவதாக கூறி விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தினர்.
2019ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட யானை: இதையடுத்து, சின்னத்தம்பி யானைக்கு 2019ஆம் ஆண்டு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பிறகு பெரிய தடாகம் பகுதியில் இருந்த சின்னத்தம்பி யானைக்கு வன கால்நடை மருத்துவர்களால் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அதனை கயிற்றால் கட்ட வனத்துறையினர் முயன்ற போது சின்னத்தம்பியுடன் இருந்த பெண் யானையும், அதன் குட்டியும், சின்னத்தம்பியை பிடிக்க முடியாதவாறு சேர்ந்தே இருந்தன. மேலும் இரண்டு யானைகளும் சின்னத்தம்பியை சுற்றி நின்று கொண்டு யாரும் அருகே செல்ல முடியாதவாறு மிகப் பெரிய பாசப்போராட்டத்தையே நடத்தின. இந்த குட்டியானை சின்னத்தம்பியின் மகன் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், கும்கி யானைகள் உதவியுடன் சின்னத்தம்பியை லாரியில் ஏற்ற முயன்றனர். ஆனால், சின்னத் தம்பியை வாகனத்தில் ஏற்றும் முயற்சியின் போது, பின்னால் இருந்து கும்கி யானை தள்ளியதில் அதன் தந்தங்கள் குத்தி சின்னதம்பிக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வாகனத்தில் மோதி அதன் 2 தந்தங்களும் லேசாக உடைந்தன. இதையடுத்து, ஒரு வழியாக சின்னத்தம்பி லாரியில் ஏறியதை தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.
மீண்டும் வாழ்ந்த இடத்தை தேடி வந்த சின்னத்தம்பி: ஆனால், இதற்கெல்லாம் கட்டுப்படவில்லை சின்னத்தம்பி. தன் பூர்வ நிலத்தையும் உடன் இருந்த விநாயகனையும் தேடி ஆனைமலையிலிருந்து 3 நாட்களாக 100 கி.மீ நடந்து திருப்பூர் மாவட்டம் கண்ணாடிபுத்தூரை அடைந்தது சின்னத்தம்பி யானை. இது குறித்து அறிந்த வனத்துறையினர் சின்னத்தம்பியை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வரகளியாறு பகுதியில் உள்ள மரக்கூண்டுக்குள் அடைத்தனர்.
இது குறித்து சூழலியல் ஆர்வலரும் கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலாளருமான சண்முகம், ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்தம்பி, விநாயகன், பெரிய தம்பிஆகிய யானைகளை கண்காணித்து வந்தோம். 2012 கால கட்டத்தில் இருந்து சின்னத்தம்பி யானையுடன் பெண் யானையும் அதன் குட்டி யானையும் ஒன்றாகவே இருந்து வந்தன. இரண்டு யானைகளும் சின்னத்தம்பியுடனே காணப்படும். 2019-ம் ஆண்டு பயிர் சேதம் செய்ததாக சின்னத்தம்பியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் போது பெண் யானையும் அந்த குட்டியும் சின்னத்தம்பியை விட்டு விலகவில்லை. கடைசி வரை பாசப்போராட்டம் நடத்தின.
பின்னர் அந்த குட்டி யானை 10 வயதை கடந்தவுடன் தாயை பிரிந்து அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதோடு, வீடுகளை உடைத்து அரிசி போன்ற உணவு பொருட்களை சாப்பிட்டு வருகிறது. அதனால் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட சுயம்பு, முத்து ஆகிய கும்கி யானைகளை வனத்துறை அழைத்து வந்தது. ஆனால், இரு கும்கி யானைகளுக்கு மதம் பிடிக்கும் சூழல் ஏற்பட்டதால், தற்போது சின்னத்தம்பி யானை வரவழைக்கப்பட்டுள்ளது "என்றார்.
இந்த முறை சின்னத்தம்பி யானை கும்கியாக வந்துள்ளது தடாகம் பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் சின்னத்தம்பியை பார்த்து அப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் ஒரு வீட்டில் சேட்டை செய்யும் மகனை தந்தை மிரட்டி வைப்பாரோ அது போல் பயிர் சேதம் செய்து வரும் தனது மகனான குட்டியானையை அடக்க சின்னத்தம்பி வந்ததாக மக்கள் கருதுகின்றனர்.
காட்டு யானை டூ கும்கி: 2019ம் ஆண்டு வரகளியாறு வனப்பகுதியில் மரக் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சின்னத்தம்பிக்கு 3 ஆண்டுகள் கும்கியாக மாற்றுவதற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் முரண்டு பிடித்தாலும், பின்னர் வனத்துறையினரின் பயிற்சிக்கு ஒத்துழைத்த சின்னத்தம்பி 2022ஆம் ஆண்டு கும்கியாக அவதாரம் எடுத்தது. இதன் பின்னர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சின்னத்தம்பி காட்டு யானைகளை கட்டுப்படுத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்து வந்தது.
இந்நிலையில், தற்போது கோவை தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி அரிசி சாப்பிட்டு வரும் ஒற்றை ஆண் யானையான தனது மகனை கட்டுப்படுத்தி, மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட கும்கி யானையாக 6 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "தற்போது பிரச்சனையாக இருக்கக் கூடிய இந்த யானை பிறந்தது முதலே சின்னத்தம்பி யானையுடன் இருந்து வந்தது. இதனை வனப் பணியாளர்களும் கவனித்துள்ளனர். தற்போது, பயிர்களை சேதப்படுத்தும் அந்த யானையை விரட்ட சின்னத்தம்பி கும்கி யானையாக மீண்டும் இந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.