தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருடிச் சென்ற வாகனம் பழுதாகி நின்றதால் பலத்த அடி வாங்கிய பலே திருடன்.. பெரம்பலூரில் ஒரே நாளில் 2 சம்பவம்! - Bike Theft in Perambalur - BIKE THEFT IN PERAMBALUR

பெரம்பலூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 1:40 PM IST

பெரம்பலூர்:நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னுசாமி (65) - சம்பூர்ணம் (55) தம்பதியி. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பூர்ணம் வயலுக்குச் சென்றிருந்த நிலையில், சற்று உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்த பொன்னுசாமி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் அமர்ந்திருந்துள்ளார்.

முதியவரைத் தாக்கி கொள்ளை முயற்சி:அப்போது இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த நான்கு பேர் வீட்டின் உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து உள்ளே இருந்த நகை மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட முயன்றனர். இதனைப் பார்த்த பொன்னுசாமி, அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அப்போது உள்ளே இருந்து ஓடி வந்த நான்கு பேரும் முதியவர் பொன்னுசாமியை, தங்கள் கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியுள்ளனர். மேலும், மிளகாய்ப் பொடியை அவர் முகத்தில் தூவி விட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நால்வரையும் விரட்டிச் சென்றபோது, மூவர் தப்பி ஓடிவிட்ட நிலையில், அதில் ஒருவர் மட்டும் கையும் களவுமாக பிடிபட்டார்.

அவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், அவரை மருவத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், போதையில் இருக்கும் அந்த நபர் தன்னைப் பற்றிய விவரங்களை முன்னுக்குப் பின் முரணாக மாற்றிக் கூறியதால் போலீசார் அவரை கைது செய்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், திருடர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனம் திருட்டு:இதேபோல், திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்றை திருடி வந்த நபர் ஒருவர், அந்த வாகனத்துடன் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே உள்ள டி.களத்தூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது அவர் திருடி வந்த இருசக்கர வாகனம் பழுதாகி நின்று விட்டது.

இதற்கிடையில், வாட்ஸ் அப் குழு மூலமாக லால்குடி பகுதியில் இருந்து இருசக்கர வாகனம் திருட்டு போன சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.களத்தூர் கிராம இளைஞர்கள், பழுதாகி நின்ற பைக் குறித்து அவரிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்து பாடலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:வீடுகள் இருந்தும் தெருவில் வாழ்க்கை நடத்தும் மக்கள்.. தூத்துக்குடி ஆதிதிராவிடர் காலனியின் அவலநிலை!

ABOUT THE AUTHOR

...view details