உலகளவில் உயிரைக் குடிக்கும் இரண்டாவது பெரிய நோயாக இருப்பது புற்றுநோய். மக்களை அச்சுறுத்தும் இந்த கொடிய நோய், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படுகின்றது. புற்றுநோய் குணமடைவதை விட, அந்த செல்களை வளர விடாமல் தடுப்பது சிறந்தது. இதற்கு, ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு மிகவும் அவசியமானதாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்றால், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவு முறையில் சேர்த்துக் கொள்வதே ஆகும். அந்த வகையில், கேன்சர் செல்களை வளர விடாமல் அழிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பூண்டு: பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. மார்பகம், பெருங்குடல், வயிறு மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோயின் அபயாத்தை குறைக்க, உணவில் அடிக்கடி பூண்டு சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
ஆப்பிள்: மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களைத் தடுப்பதில் ஆப்பிள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து புற்றுநோயை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களிடம் இருந்து பாதுகாக்கிறது.
ப்ரோக்கோலி: புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயைத் தடுக்க ப்ரோக்கோலி உதவுகிறது. இதில் உள்ள சல்போராபேன் (Sulforaphane) உடலில் உள்ள பாதுகாப்பு என்சைம்களை தூண்டி நச்சுக்களை நீக்குகிறது. ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரீன் டீ: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உணவுக்குழாய், நுரையீரல், வாய் மற்றும் கணையப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள பாலிபினால்கள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.
இஞ்சி: புற்றுநோய் செல்களை தங்களை தாங்களே அழித்துக்கொள்ள இஞ்சி காரணமாக இருப்பதாக சர்வதேச ஆய்வு தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு Journal of Nutrition and Cancer இதழில் வெளியான ஆய்வில், இஞ்சி நுகர்வு புற்றுநோய் செல்கள் விரிவடையும் சக்தியைத் தடுப்பதாக தெரிவித்துள்ளது.
மாதுளை: இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், பாலிஃபீனால் மற்றும் துவர்ப்பு தன்மை மார்பக புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
திராட்சை: திராட்சையில் உள்ள எலாஜிக் அமிலம் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கிறது என நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எலாஜிக் அமிலம் சுவாச மண்டலத்தை சுற்றுச்சூழலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுரியிரிகளை தடுக்கிறது.
மஞ்சள் தூள்: கேன்சர் செல்களை அழிப்பதில் மஞ்சள் தூள் முக்கிய பங்கு வகிக்கின்றது. மஞ்சள் தூளில் உள்ள குர்குமின் எனும் வேதிப்பொருள், உடலில் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என பல ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்த 6 பழக்கத்தை விட்டால் போதும்.. புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.