சென்னை: சென்னை ஐஐடியில் முதல் முறையாக இளங்கலை படிப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையில் 30 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, சிறந்த விளையாட்டு வீரர்கள் சேர்க்கையை (Sports Excellence Admission – SEA) தற்போது 2025 கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுதியுள்ளது.
அந்த வகையில், சென்னை ஐஐடியில் விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை (SEA) பிரிவின்கீழ், தேசிய அளவில் சாதனைப் படைத்த 5 தடகள வீரர் - வீராங்கனைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.
ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான JEE (ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கையை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.

இதில், இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் பட்டப்படிப்பு பாடத் திட்டத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிலும், ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படுகிறது. நாட்டிலேயே முதன்முறையாக விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கையை தனது இளங்கலைப் படிப்புகளில் சென்னை ஐஐடி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
விளையாட்டில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களை அங்கீகரிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். தகுதியான மாணவர்கள் விளையாட்டுகளில் தொடர்ந்து சிறந்து விளங்கவும், தொடர்ந்து உயர்கல்வியைத் தொடரவும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது. தற்போது, இத்திட்டத்தின் கீழ், தேசிய அளவில் சாதனை படைத்து 5 விளையாட்டு வீரர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், “விளையாட்டுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை, இளம் குழந்தைகளை சிறு வயதிலேயே விளையாட ஊக்குவித்தல் அவசியம், என்பதை தெரிவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஐஐடியின் முன்முயற்சியாகும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2024-25 கல்வியாண்டில் விளையாட்டு பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள 5 விளையாட்டு வீரர்கள்:
வ.எண் | மாணவர்களின் பெயர் | மாநிலம் | விளையாட்டு பிரிவு | ஐஐடி-யில் சேர்ந்துள்ள பாடப்பரிவு |
1 | ஆரோஹி பாவே | மகாராஷ்டிரா | கைப்பந்து | பி.எஸ் - மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் (B.S - Medical Science and Engineering) |
2 | ஆர்யமான் மண்டல் | மேற்கு வங்கம் | வாட்டர் போலோ | பி.டெக் - கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (B.Tech - Computer Science and Engineering) |
3 | நந்தினி ஜெயின் | டெல்லி | ஸ்குவாஷ் (சுவர்ப்பந்து) | பி.டெக் - கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (B.Tech - Computer Science and Engineering) |
4 | பிரபாவ் குப்தா | டெல்லி | டேபிள் டென்னிஸ் | பி.டெக் - செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (B.Tech - Artificial Intelligence and Data Science) |
5 | வங்கலா வேதவச்சன் ரெட்டி | ஆந்திரா | லான் டென்னிஸ் | பி.டெக் - செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் (B.Tech - Artificial Intelligence and Data Science) |
இது குறித்து, சென்னை ஐஐடி விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு மையத்தின் (Center for Excellence in Sports Science and Analytics) தலைவரும், பேராசிரியருமான மகேஷ் பஞ்சக்னுலா கூறுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு பிரிவில் சிறப்பு மாணவர் சேர்க்கை திட்டம் கருத்தாக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 2024 இல் விளையாட்டு சிறப்பு சேர்க்கை மாணவர்களின் முதல் மாணவர் சேர்க்கை இளங்கலைப் படிப்புகளில் சேர்க்கப்பட்டது.
ஏராளமான விண்ணப்பங்கள் வரப்பெற்றன. ஆனால், இறுதியாக சிறந்த மற்றும் கல்வித்தகுதி பெற்ற 5 மாணவர்களை நாங்கள் சேர்க்க முடிந்தது. அவர்கள் மற்ற ஐஐடி மாணவர்களைப் போலவே ஜேஇஇ (அட்வான்ஸ்) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில், எதிர்பார்க்கப்படும் கல்வித் தகுதியின் ஒப்பீட்டு தரத்தில் எந்த சமரசமும் இல்லை. அதே நேரத்தில், விளையாட்டு ஆர்வத்திற்கும், சிறப்பிற்கும் வெகுமதி அளிக்கப்படுகிறது.
விளையாட்டுத் திறமையால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி, குறிப்பாக ‘செஸ்ஸா’ மூலம் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு உலகில் தொழில்நுட்பத்தின் மூலம் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த உதவுவதுதான் எங்கள் முயற்சி. தேசிய விளையாட்டு வீரர்கள் உலக அரங்கில் சிறந்து விளங்க உதவும் வகையில், பல விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் செஸ்ஸா முன்னணியில் இருந்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
SEA-க்கான மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள்:
- SEA-க்கான மாணவர் சேர்க்கை செயல்முறை JEE தேர்வு மூலம் நடைபெறுகிறது. அதன்படி, விளையாட்டு வீரர்கள் JEE (Advanced)-க்கு தகுதி பெற வேண்டும்.
- ஆனால், அவை கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) போர்டல் மூலம் அல்லாமல், சென்னை ஐஐடி மூலம்
இயக்கப்படும் ஒரு தனி போர்டல் மூலம் இருத்தல் வேண்டும். - இந்த திட்டத்தின் மூலம் சேர்க்கைக்கு தகுதிபெற, விண்ணப்பதாரர்கள் ஜேஇஇ (அட்வான்ஸ்)
பொதுவான தரவரிசைப் பட்டியலில் அல்லது பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில்
இடம் பெற்றிருக்க வேண்டும். - கடந்த நான்கு ஆண்டுகளில் ஏதேனும் தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டியில் குறைந்தது ஒரு பதக்கத்தை வென்றிருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட விளையாட்டுப் பட்டியலில் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு
விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணின் அடிப்படையில், ஒரு தனி விளையாட்டு
தரவரிசைப் பட்டியல் (SRL) தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலின் அடிப்படையில் மாணவர்
இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும். - மேலும் தகவல்களை https://jeeadv.iitm.ac.in/sea/information.html என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இது குறித்து தேசிய ஜூனியர் லெவல் கைப்பந்து வீராங்கனையான ஆரோஹி பாவே (Arohi Bhave) கூறுகையில், நான் தொடக்கத்தில் வேடிக்கைக்காக கைப்பந்து விளையாட்டில் ஈடுபட்டேன். பின்னர், தொழில்ரீதியாக போட்டியிடத் தொடங்கினேன். கல்வியில் சிறந்து விளங்குவதற்கு சென்னை ஐஐடி எப்போதும் நற்பெயரைப் பெற்றுள்ளது. அதில், என்னை மிகவும் ஈர்த்தது இடைநிலை கற்றலில் அதன் முக்கியத்துவம்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி: ஆசியாவிலேயே பெரிய ஆழமற்ற கடல் அலை படுகை!
கல்வியுடன் விளையாட்டை நிர்வகிப்பது மிகுந்த அர்ப்பணிப்பை எடுக்கும். தேர்வுகளின் போது படிப்பை நிர்வகிப்பது சில நேரங்களில் கடினமாகும். ஆனால், சரியான வழிகாட்டுதல் மற்றும் விளையாட்டு இருந்தால் அதை சமாளிக்க முடியும்” இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தேசிய அளவிலான வாட்டர் போலோ செலுத்துபவரும், நீச்சல் வீரருமான ஆர்யமான் மண்டல்(Aryaman Mandal) கூறும்போது, “எனது விளையாட்டு வாழ்க்கையைத் தவிர, தொழில்நுட்பத் துறையிலும் எனக்கு ஆர்வம் இருந்தது. அதனால் தான் சென்னை ஐஐடி தேர்ந்தெடுத்துள்ளேன். கல்லூரியில், விளையாட்டு மற்றும் படிப்பை நிர்வகிப்பது எளிதானது அல்ல. ஆனால், எனக்கு சந்தேகம் ஏற்படும் போதெல்லாம் படிப்பில் உதவ என் நண்பர்கள் என்னிடம் உள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.
பின்னர், 2018, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற டெல்லியைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை நந்தினி ஜெயின் (Nandini Jain)கூறியதாவது, “அறிவியல் துறையில் ஏதாவது செய்ய விரும்பினேன். சென்னை ஐஐடியை விட சிறந்த கல்லூரி எதுவும் இல்லை. விரிவுரையின் போது பேராசிரியர்கள் தெளிவாக விளக்கும்போது முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். இதனால் எனது பயிற்சிக்குப் பிறகு கூடுதல் நேரம் செலவிட வேண்டியதில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, தேசிய புகழ் பெற்ற டேபிள் டென்னிஸ் வீரரான பிரபாவ் குப்தா (Prabhav Gupta)கூறுகையில், “பொறியியல்
படிப்பதற்கு நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனம் சென்னை ஐஐடி. கற்றல், வளர்ச்சி, வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்குவதற்கான சிறந்த வாய்ப்புகளை இது வழங்குகிறது. விளையாட்டு - படிப்பு இரண்டையும் நிர்வகிப்பது இங்கு சவாலானது.
இருப்பினும், முடிந்தவரை படிப்பதன் மூலமும், தினமும் டேபிள் டென்னிஸ் பயிற்சி செய்வதன் மூலமும் இரண்டிற்கும் நேரம் ஒதுக்குகிறேன். இக்கல்வி நிறுவனத்தில் ஆர்வமுள்ள சக மாணவர்களுடன் பயிற்சி செய்வதன் மூலம் எனது விளையாட்டு கணிசமாக மேம்பட்டுள்ளது” என்றார்.
இறுதியாக, லான் டென்னிஸ் வீரரான வாங்கலா வேதவச்சன் ரெட்டி (Vangala Vedavachan Reddy) கூறுகையில், “சென்னை ஐஐடியை கல்வித் திறமைக்காக நான் தேர்ந்தெடுத்தேன். படிப்பையும் விளையாட்டையும், சமநிலைப்படுத்தும் வகையில் தெளிவான அட்டவணையை பராமரித்து வருகிறேன்.ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு நிலையான படிப்பு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பதக்கம் வெல்வதற்கு உடல் உறுதியுடன், மன உறுதியும் திறமையும் தேவைப்படுகிறது” என்றார்.