ஓமலூர்: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அலுவலகம் வந்த கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்பு பணியாற்றியதை விட பல மடங்கு உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் என அதிமுக தொண்டர்களை கேட்டுக் கொண்டார்
மேலும் அவர் பேசியதாவது:
மீண்டும் அதிமுக ஆட்சி அமைய தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். திமுகவின் பொய் பிரச்சாரங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து அதிமுகவிற்கு மக்கள் பெரும் ஆதரவு வழங்கும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் அதிமுக தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.