சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வரும் மாணவி ர.மா.தமிழினி. இவரது தந்தை ராமசாமி மாதவன் மற்றும் தாய் ரஞ்சிதா. ராமசாமி மாதவன் அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். தமிழினி பேச தொடங்கிய காலத்தில் இருந்தே தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ் எழுத்துக்களை கற்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி தமிழினி தமிழ் மொழியில் உள்ள 247 தமிழ் எழுத்துக்களையும் ஒரு நிமிடம் 14 வினாடிகளில் பாடலாக பாடி ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இடம் பிடித்துள்ளார். 6 வயதில் தமிழ் மொழியில் உள்ள 247 தமிழ் எழுத்துக்களையும் ஒரு நிமிடம் 14 வினாடிகளில் பாடலாக பாடி முதல் சிறுமியாக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை போற்றும் வகையில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அவருக்கு ஓர் சான்றிதழ், மெடல், ஒரு பேனா மற்றும் பேட்ச் ஆகியவை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் விருது - 2024: சமூக சேவை மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பில் சேவையாற்றும் நபர்கள், அமைப்புகள் தேர்வு!
இந்நிலையில் இன்று சிறுமியின் சாதனையை பாராட்டும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது அலுவலகத்திற்கு சிறுமி மற்றும் அவரது பெற்றோரை அழைத்து, வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
சிறுமி கொடுத்த இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாவது, “தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஆர்.எம். தமிழினி (டிசம்பர் 12, 2018 அன்று பிறந்தார்), 6 வயதில், 1 நிமிடம் 14 வினாடிகளில் தமிழ் எழுத்துக்களின் 247 எழுத்துக்களை ஒரு பாடலாக (உயிர்மெய் எழுத்துகள்) வாசித்ததற்காக ‘ஐபிஆர் சாதனையாளர்’ என்ற பட்டத்தைப் பெற்றார், இது டிசம்பர் 21, 2024 அன்று உறுதிப்படுத்தப்பட்டது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.