திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.
திருச்செந்தூரில் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மற்றும் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த மதிப்பீட்டில் திருச்செந்தூர் கோயிலில் ராஜகோபுரம் உள்பட பல்வேறு திருப்பணிகளும், கோயிலைச் சுற்றியுள்ள விடுதிகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன. மேலும் புதிய விடுதிகளும் கட்டப்பட்டன.
இந்த பெருந்திட்ட வளாகப் பணியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜகோபுர திருப்பணிக்கான பாலாலயம் நடந்தது. இதையடுத்து 137 அடி உயரமும், 9 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இதில் ராஜ கோபுரத்தில் கீழ்த்தள பகுதிகள், தூண்கள் புதுப்பிக்கும் பணிகளும், ராஜகோபுரத்தில் உள்ள 9 கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும், கோபுரக்கலசங்களில் உள்ள பழைய நவதானியங்களை மாற்றுவதற்காகவும் ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் கோபுரத்திலிருந்த கலசங்கள் கழற்றி கீழே கொண்டு வரப்பட்டன. அப்போது கோபுர கலசத்துக்குள் இருந்த வரகை (வரகு) எடுத்து பார்க்கும் போது 15 ஆண்டுகள் ஆகியும், அதன் தன்மை மாறாமல் அப்படியே இருந்ததைக் கண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர். ராஜ கோபுரத்தின் கும்ப கலசங்களை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது பணிகள் பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது.
இதற்கு முன்பு திருச்செந்தூர் கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இந்த வருடம் ஜூலை மாதம் 7 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
இதற்காக பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் ராஜகோபுரத்தில் இருந்த கும்ப கலசங்களை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் புதுப்பிக்கப்பட்ட கும்ப கலசங்கள் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கீழே புதுப்பித்து வைக்கப்பட்டிருந்த 9 கோபுர கலசங்களும் கோபுர விமான தலங்களுக்கு கொண்டு வரப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் உள்பட அனைவரும் கலசத்திற்குள் வரகு போட்டு வணங்கினர். அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பின் கோபுர கலசங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக கயிறுகள் கட்டி ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு கருங்காலி மரத்தின் கம்புகள் ஊன்றப்பட்டுள்ள இடத்தில் இந்த கலசங்கள் ஒவ்வொரு அடுக்காக வைக்கப்பட்டு மீண்டும் அந்த கலசங்களில் வரகு நிரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து கோபுரத்தின் உச்சியில் கும்ப கலசங்களும் வைக்கப்பட்டன. தொடர்ந்து குடமுழுக்கு அன்று இந்த கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.