சென்னை: வடசென்னை கடலோர பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இறந்த நிலையில் 10 க்கும் மேற்பட்ட ஆமைகளின் சடலங்கள் ஒதுங்கின. இந்நிலையில் ஆமைகள் இறந்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
பசுமை தீர்ப்பாய உத்தரவை தொடர்ந்து கடலில் ஆமைகள் இறந்ததற்கான காரணத்தை கண்டறியவும், கடலில் ஆமைகள் இறப்பதை தடுக்கும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் மீன்வளத்துறை, வனஉயிரின பாதுகாப்பு துறை, தமிழக கடலோர காவல்படை, தன்னார்வலர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைகூட்டம் நடைபெற்றது.
இதில் மீன்வளத்துறை இணை இயக்குநர் ஷர்மிளா, உதவி இயக்குநர் திருநாகேஸ்வரன், கடலோர காவல்படை துணை கமாண்டோ இன்பராஜ், வன உயிரின பாதுகாப்பு துறை ரேஞ்ச் அலுவலர் பரந்தாமன் மற்றும் ட்ரி பவுண்டேசன் தன்னார்வலர் அமைப்பு சார்பில் சுப்ரஜா, எஸ்எஸ்டிசிஎன் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நிஷாந்த் மற்றும் வடசென்னை பகுதி மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக தற்போது பழவேற்காடு பகுதிக்கு வந்து செல்லும் இந்த கால நேரத்தில் அதிகளவு விசைதிறன் கொண்ட படகுகள் இயக்கப்படுவதால் ஆமைகள் இறப்பு அதிகரித்துள்ளதாகவும், அரசு நிர்ணயித்த 5 நாட்டிகல் மைல் தூரம் வரை மீன்கள் பிடிக்கக்கூடாது என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல் மீனவர்களும் தென்மாநில மீனவர்கள் அதிக விசைதிறன் கொண்ட படகுகளை வைத்து இப்பகுதியில் மீன்பிடிப்பதால் ஆமைகள் இறப்பு அதிகரித்துள்ளதாக தங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்தனர்.
இதுகுறித்து ட்ரி பவுண்டேசன் தலைவர் சுப்ரஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், கடல் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வியல் ஆதாரமாக இருந்து வருகிறது. கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமையாகும். கடல் ஆமைகள் தற்போது இனப்பெருக்கத்திற்காக மன்னார் வளைகுடாவில் இருந்து வடசென்னை பகுதி வழியாக பழவேற்காடு முகத்துவாரம் பகுதிக்கு செல்கின்றன. ஆமைகள் இறப்பை தடுப்பதற்கு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து சென்னை செங்கை சிங்காரவேலர் விசைப்படகு மீனவர் சங்கம் தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆமைகள் டிசம்பர் மாதத்தில் தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக கரை பகுதிக்கு வந்து செல்கின்றன. இதனால் எங்களுடைய வலைகளில் ஒரு சில ஆமைகள் சிக்கினாலும் அவற்றை கடலில் விட்டு விடுகிறோம். தற்போது தென்மாவட்டங்களில் இருக்கும் மீனவர்கள் அதிக விசைத்திறன் கொண்ட படகுகளில் இந்த பகுதியில் வந்து மீன்பிடிப்பதால் இங்கு ஆமைகளின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாங்கள் ஆவணங்களுடன் புகார் தெரிவித்து வருகிறோம், இதற்கு மீன்வளத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.