கோவை:பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு நாளை (மே 30) வருகை புரிகிறார். அதே போல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். மோடி மற்றும் அமித்ஷா வருகைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், இருவரையும் கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்த அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி, அங்குள்ள பூரிஜெகநாதர் ஆலயத்தில் உள்ள பொக்கிஷங்கள் அடங்கிய அறைகளின் சாவி காணாமல் போயுள்ளது எனவும், அவற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு சென்று விட்டார்கள் என்றும் அப்பட்டமாகத் தமிழ்நாட்டு மக்களின் மீது பழியை சுமத்தி வருகிறார். மேலும் தமிழர்கள் திருடர்கள், களவாணிகள் என்பது போல ஒடிசா மாநில மக்களின் மத்தியில் பேசியுள்ளார்.
ஒடிசாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐஏஎஸ் (VK Pandian IAS) அதிகாரி ஒடிசா முதலமைச்சர் பட்நாயக் உடன் இணைந்து பணியாற்றிய காரணத்தினால், பிரதமர் மோடி பாண்டியன் மீது பழி சுமத்துவது போல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் களவாணிகள், திருடர்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
அதேபோல, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வட மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், வட மாநில மக்களை தமிழ்நாட்டில் கேவலமாக நடத்துகிறார்கள்; இழிவாகப் பேசுகிறார்கள் எனப் பொய்யான தகவலைப் பரப்பி, வடமாநில மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே பகையை உருவாக்குவது போல் தொடர்ந்து பேசி வருகிறார்.