கரூர்: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி சின்னதாராபுரம் பகுதியில் பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 100வது நாள் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நேற்று பிப்.21) நடைபெற்றது. இதில், பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், சேலம் கோட்டப் பொறுப்பாளரும், முன்னாள் எம்.பியுமான ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்தனர்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்களிடையே உரையாற்றிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி. இந்த ஆண்டும் மோடி ஆட்சிக்கு வரவேண்டும். மக்களவையில் 400 எம்பிக்களைத் தாண்டி அமரும்போது, தமிழகத்திலிருந்து 39 எம்.பிக்களை பாஜக சார்பில் நீங்கள் தேர்வு வேண்டும்.
ஒரே ஒரு முறை நம்பிக்கையோடு பாஜவுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த 2024ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரைக்கும் நீங்கள் மாற்றத்தைப் பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள் எந்தக்கட்சி தமிழகத்தில் அமர வேண்டும்.
திமுகவில் உள்ள 35 அமைச்சர்களில் 15 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நடைபெற்று வருகிறது. கரூரைச் சேர்ந்த அமைச்சர் தற்போது சிறையில் இருக்கிறார். இந்தியாவில் அரசியலையும், ஊழலையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது என்பவருக்கு இதுவே உதாரணம்.
மோடி ஆட்சி: ஒரு கட்சியின் தலைவர் நேர்மையாக இருந்தால் போதாது, கட்சியில் உள்ள மற்ற தலைவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நேர்மையான ஆட்சி நடத்தி வரும் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கும் இதுதான் வித்தியாசம். மோடி அமைச்சரவையில் 76 அமைச்சர்கள் மக்களின் வரிப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் ஆட்சி செய்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா: செந்தில் பாலாஜி 280 நாட்களாக அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் சிறையில் உள்ளார். தற்பொழுது ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தனது இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் 280 நாட்களாகத் தலைமறைவாக உள்ளார். இன்னும் திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் சிறைக்குச் செல்ல இருக்கிறார்கள்.
கரூர் மாவட்டத்தில் மீண்டும் விவசாயம் புத்துணர்வு பெற வேண்டும். விவசாயிகளுக்கு உறுதுணையாக நீர் மேலாண்மை சிறப்பாக மேற்கொள்ளும் அரசு அமைய வேண்டும். தொலைநோக்கு திட்டங்களை வகுக்கும் பாஜக தமிழகத்தில் வளர வேண்டும்.