தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பசித்தவனுக்குக் கால் வயிற்றுக்கு மட்டும் உணவு.. வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் அதிருப்தி! - minister MRK Panneerselvam

TN Agri Budget 2024: சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், பசித்தவனுக்குக் கால் வயிற்றுக்கு மட்டுமே உணவு அளிக்கப்பட்டது போல உள்ளது எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Agricultural Budget
வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் வருத்தம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 3:49 PM IST

Updated : Feb 20, 2024, 5:08 PM IST

வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் அதிருப்தி

சென்னை: நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், உழவர் நலத்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். மொத்த பட்ஜெட் மதிப்பீடு ரூ.42,281 கோடியில், வேளாண் பட்ஜெட்களின் வளர்ச்சி நடவடிக்கையாகக் கடந்த 3 ஆண்டுகளில் பாசனம் பெற்ற நிலப்பரப்பு 95 லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் டிசம்பர் மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்காக ரூ.208 கோடியே 20 லட்சம் இழப்பீடாக, ரூ.2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் மண் வளத்தைப் பெருக்குவதற்கான 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வந்திருந்தாலும், விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லாத பட்ஜெட்டாக இந்த வேளாண் பட்ஜெட் 2024 - 2025 உள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், "சட்டமன்றத்தில் வேளாண்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில், பல்வேறு நிகழ்வுகள் விடுபட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்கள், நீர் மேலாண்மை குறித்தும், நதிகள் இணைப்பு குறித்தும் ஒரு வரி கூட இடம் பெறவில்லை.

அதேபோல் இந்த நிதிநிலை அறிக்கையில் வனவிலங்குகளால் சேதப்படுத்தப்படுகின்ற பயிர்ச் சேதங்கள், உயிர்ச் சேதங்கள் குறித்தும் ஒரு வரி கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை, இது மிகவும் வருத்தம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச் சேதம் குறித்து வேளாண் துறை பட்ஜெட்டில் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் அது எதுவும் செய்யவில்லை.

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு தென்னை நல வாரியம் கட்டாயம் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம். அது கொச்சினில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் தென்னை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குத் தேங்காய் எண்ணெய் ரேசன் கடைகளில் வழங்கப்படுகிறது. தென்னை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.150 கோடி மதிப்பில் இறக்குமதி செய்து பாமாயில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், உள்நாட்டில் தேங்காயால் உற்பத்தி செய்யப்படக் கூடிய பொருளுக்கு, கட்டுபடியான விலை வேண்டும் எனக் காலம் காலமாகக் குரல் கொடுத்து வருகின்றோம். ஆனால் அதுகுறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த பட்ஜெட்டில் அறிவிப்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்தோம் அதுவும் இடம் பெறவில்லை.

நீர் மேலாண்மை குறித்து எந்த அறிவிப்பு இல்லை, வனவிலங்குகள் சேதம் குறித்தும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கரும்புக்கு ஒரு டன்னுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது மற்றும் மண்புழு உரம் தயாரிக்க ரூ.2 கோடி உழவர் சந்தைகளுக்கு நிதி ஒதுக்கீடு, 10 உழவர் சந்தையைத் தேர்ந்தெடுத்து ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது, பசு உரம் தயாரிப்புக்கு ரூ.20 கோடி உள்ளிட்டவையெல்லாம் ஒதுக்கீட்டில் வந்துள்ளது வரவேற்கத்தக்கது.

மேலும், கோவையில் இயங்கி வந்த விதை உற்பத்தி மையத்தை சென்னைக்கு மாற்றி இருந்தனர். அது மீண்டும் கோவையிலேயே செயல்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்த பட்ஜெட் பசித்தவனுக்குக் கால் வயிற்றுக்கு மட்டுமே உணவு அளிக்கப்பட்டது போல உள்ளது. வன விலங்குகளால் அதிகம் பாதிக்கப்படும் கோவை மாவட்டத்திற்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: கரும்பு விவசாயிகளுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத் தொகை: வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது என்ன?

Last Updated : Feb 20, 2024, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details