தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"செல்லப்பிள்ளை மீண்டு வர வேண்டி பூஜை செய்தோமே"- காந்திமதி யானைக்கு கண்ணீர் மல்க பக்தர்கள் அஞ்சலி! - GANDHIMATHI ELEPHANT

நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி இன்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் பக்தர்கள் கண்ணீர் மல்க யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காந்திமதி யானைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பாகன்
காந்திமதி யானைக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் பாகன் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2025, 4:04 PM IST

திருநெல்வேலி:தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நலக்குறைவால் இன்று காலை 7:30 மணிக்கு உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 56 வயதான காந்திமதி யானை, பக்தர் நயினார் பிள்ளை என்பவரின் நன்கொடையால் 1985ஆம் ஆண்டு நெல்லையப்பர் கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்டு, கோயில் நிர்வாகத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.

நெல்லை மாவட்டத்தின் செல்லப்பிள்ளையாக காந்திமதி யானை நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும், முன்செல்ல திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். காந்திமதி யானையை கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் வைத்து கோயில் நிர்வாகம் பராமரித்து வந்தது.

நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் செல்லையா பேட்டி (ETV Bharat Tamilnadu)

காந்திமதி யானைக்கென தனி மின்விசிறி, தனி குளியல் தொட்டி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு, கோயில் ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஒருமாத காலமாக தூக்கமின்மை, மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் காந்திமதி யானை பாதிக்கப்பட்ட நிலையில் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் (ஜனவரி.11) யானை கீழே அமர்ந்து, எழுந்து நிற்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில் கிரேன் கொண்டு நிற்க செய்து, மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்த வந்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனால் யானையை பராமரித்து வந்த பாகன் ராமதாஸ், உதவி பாகன் ஆகியோர் யானை முன்பு நின்று கண்கலங்கிய நின்றனர். மேலும் பக்தர்கள் கண்ணீர் மல்க யானைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உயிரிழப்பு...பக்தர்கள் சோகம்!

இறந்த காந்திமதி யானை கோயில் அருகே உள்ள தாமரைக்குளம் மைதானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் யானையின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். யானை இறந்ததைத் தொடர்ந்து கோயில் நடை மூடப்பட்டது. பரிகார பூஜைக்குப் பின்பு திறக்கப்படும்.

யானை உயிரிழப்பு குறித்து கோயில் அறங்காவலர் செல்லையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “யானையின் பின் காலில் வலி ஏற்பட்டது. எனவே, தொடர்ந்து மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் இயற்கையை வெல்ல முடியாது என்பதால் இன்று காலை யானை உயிரிழந்துவிட்டது. தாமரை குளத்தில் அதன் இறுதி சடங்குகள் நடைபெறும்” என்றார்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கூறும்போது, “கோயில் யானைகளுக்கு என்னென்ன நடைமுறைகளை வனத்துறை சார்பில் பின்பற்ற வேண்டுமோ, அதே நடைமுறைகளை பின்பற்றுவோம் கோயில் யானை என்பதால் பிரேத பரிசோதனை செய்ய தேவையில்லை” என்றார்.

இதுகுறித்து பக்தர் பகவதி கூறும்போது, “யானை பூரண நலம் பெறவேண்டி இன்று காலை தான் அடியார்கள் எல்லாம் சேர்ந்து சிறப்பு பூஜை நடத்தினோம். பூஜையை முடித்துவிட்டு அப்போதுதான் வீட்டிற்கு சென்றோம். சில நிமிடத்தில் யானை இறந்துவிட்டதாக தகவல் வந்தது. மனதிற்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. காந்திமதி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் விளையாடகூடிய செல்லப் பிள்ளையாக இருந்தது. நேற்று தான் சனி மகாபிரதோஷம் நடைபெற்றது. இதுபோன்ற சூழலில் உயிரிழந்திருப்பது கஷ்டமாக உள்ளது” என்று கண்ணீரோடு தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details