சென்னை: மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் அமைந்துள்ள உழைப்பாளர் நினைவுச் சின்னத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், ஆட்டோ தொழிலாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "உலகெங்கிலும் வாழும் ஒட்டுமொத்த பாட்டாளிகளை இந்த நாளில் நினைவு கூர்ந்து நமது உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். மேலும், இந்தியாவில் 8 மணி நேர வேலையை உறுதி செய்தது சட்டத்துறை அமைச்சராக இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் என்பதை நினைவு கூர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செம்மாந்தவணக்கத்தைச் செலுத்துகிறோம் என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், மோடி தலைமையிலான தொழிலாளர் விரோத பாசிச பாஜக அரசுக்கு எதிராக, கடந்த5 ஆண்டுகளாகத் தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். மூன்றாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில் தொழிலாளர் விரோத மோடி அரசைத் தூக்கி எறிவோம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம். அதனை நடைமுறைப்படுத்த அனைவரும் தேர்தல் களத்தில் ஒருங்கிணைந்து நிற்போம். தொழிலாளர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து குளறுபடி செய்து வருகிறது. வாக்குப்பதிவு குறித்துத் தேர்தல் அன்று ஒரு சதவிகிதமும், சில நாட்கள் கழித்து வேறு சதவீதமும் அறிவிக்கிறது. 11 நாட்கள் கழித்து வாக்குப்பதிவு சதவீதத்தை மாற்றி அறிவித்திருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் இதனை தெளிவுபடுத்த வேண்டும். அறிவியல் பூர்வமாக இதில் எந்த மாறுபாடும் இல்லை என்று உறுதிபடுத்தத் தேர்தல் ஆணையம் முன் வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மே 1' உழைக்கும் வர்க்கத்திற்காக ஒரு நாள்.. ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.! - Why Is May Day Celebrated In India