கோயம்புத்தூர்: கோவையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது மகனின் மாற்றுச் சான்றிதழை, தனியார் பள்ளி நிர்வாகம் ஓர் ஆண்டின் முழு கட்டணம் செலுத்தாமல் தர மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க மாணவனின் தந்தை செல்வராஜ் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
இது குறித்து பேசிய அவர், “பொள்ளாச்சி அங்களகுறிச்சியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எனது மகன் ஒன்பதாம் வகுப்பு சேர்தேன். அதையடுத்து சில குடும்ப சூழல் காரணமாக பள்ளியின் கட்டணம் செலுத்த முடியாமல் போனது.
அதனால், மகனை பள்ளியை விட்டு நிறுத்தி விட்டோம். தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கக்கூடிய பள்ளியில் சேர்த்திருக்கிறோம். மாற்றுச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் தற்போது எனது மகனால் காலாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த தனியார் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் (TC ) பலமுறை கேட்டும் பள்ளி நிர்வாகம் மீதமுள்ள 60 ஆயிரம் பணத்தை கட்டாமல் தர முடியாது என்கின்றனர். எங்களிடம் அவ்வளவு வசதி இல்லாத காரணத்தினால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மகனின் பள்ளிப்படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க தொடர்ந்து மனு அளித்து வருகிறோம், இத்தோடு ஆறாவது முறையாக மனு அளிக்கிறோம்.
இதையும் படிங்க: பிறந்தநாள் ஸ்பெஷல்.. 50 லட்சம் கைரேகைகள் கொண்டு வரையப்பட்ட உதயநிதி ஸ்டாலின் படம்!
நான் கைரேகை ஜோசியம் பார்க்கும் வேலை செய்து வருகிறேன். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவ்வளவு பணம் எங்களால் திரட்ட முடியாத நிலையில் உள்ளோம். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் எங்களுக்கு ஆட்சியர் உதவி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இது குறித்து அந்த தனியார் பள்ளி நிர்வாகத்தை ஈடிவி பாரத் தமிழ்நாடு தொடர்பு கொள்ள முயற்சிக்கையில் தொடர்பு கிடைக்கவில்லை.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்