புதுச்சேரி: பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பங்கேற்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இளைஞர் சங்கத் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்த போது மேடையில் வெளிப்படையான வாக்குவாதம் நடந்தது. அந்த வார்த்தைப் போர் பின்வருமாறு.
ராமதாஸ்: அவர் (முகுந்தன்) மாநில இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பை ஏற்று, அன்புமணி ராமதாஸ்-க்கு உதவியாக..
அன்புமணி: (இடைமறிக்கிறார்) எது எனக்கா?
ராமதாஸ்: ஆமாம்!
அன்புமணி: எனக்கெல்லாம் வேண்டாம்! இப்போதான் நாலு மாசத்துக்கு முன்னாடி வந்தான், கட்சியிலேயே 4 மாசத்துக்கு முன்னாடி வந்திருக்கிறான் , அவனுக்கு இளைஞர் சங்கம்னா? என்ன அனுபவம் இருக்குது அவனுக்கெல்லாம். வேற எதுனா போட்டு பண்ணுங்க. நல்ல அனுபவசாலியா பண்ணுங்க. அதான் நான் சொன்னேன். களத்துல நல்ல ஆளுங்க வேணும், நல்ல திறமையா வேணும்னு. வந்த உடனே அப்புறம் இளைஞர் சங்கம் பொறுப்புல போட்டுனு.
ராமதாஸ்: நான் சொல்றத தான் கேக்கனும், யாரா இருந்தாலும் நான் சொல்றததான் கேக்கனும் புரியுதா?
அன்புமணி: (இடைமறிக்கிறார்) நீங்க சொல்லுங்க! எல்லாம் பண்ணுங்க, நல்லா பண்ணுங்க.
ராமதாஸ்: நான் சொல்றத கேக்கலன்னா யாரும் இந்த கட்சியில இருக்க முடியாது! இது நான் உண்டாக்கின கட்சி. நான் சொல்றத கேக்கலைனா யாரும் இந்த கட்சியில இருக்க முடியாது!
அன்புமணி: அது சரி! அது சரி!
ராமதாஸ்: என்ன சரி ! சரின்னா போ அப்போ! மீண்டும் சொல்றேன், முகுந்தன் மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார். கைத்தட்டுங்கப்பா!
அன்புமணி: குடும்பத்தில இன்னும் ஒண்ணு போடுங்க, வெச்சிக்கட்டும். (மைக்கை மேஜை மீது போடுகிறார்)
ராமதாஸ்: நன்றி யார் சொல்றது?
(அன்புமணி மேஜை மீது போட்ட மைக்கை எடுத்து ஜி.கே.மணி பேச முயற்சிக்கவும், அன்புமணி இடைமறித்து மைக்கை தன் கையில் மீண்டும் வாங்குகிறார்)
அன்புமணி: அதாவது சென்னையில பனையூர்ல ஒரு அலுவலகம் நான் இப்போ வெச்சிருக்கிறேன். அங்கே வந்து என்னை பார்க்கலாம். ஒரு புதுசா ஒன்னு ஆரம்பிச்சிருக்கிறேன். பனையூர்ல 3வது தெருவில ஆரம்பிச்சிருக்கிறேன். (போன் நம்பரை தேடுகிறார்)
ராமதாஸ்: (அன்புமணி தொலைபேசி எண்ணை தேடும் நேரத்தில் ராமதாஸ் பேச்சைத் தொடங்கினார்) மீண்டும் சொல்கிறேன்! மாநில இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன், பரசுராமன் முகுந்தன்!
அன்புமணி: 044-46060628 குறிச்சிக்கோங்க. நீங்க எப்போ வேணும்னாலும் அலுவலகம் வந்து என்னை பார்க்கலாம்.
ராமதாஸ்: அதுதான் இன்னொரு அலுவலகம் திறந்துக்கோ, நடத்திக்கோனு தானே சொல்றோம். நீ திறந்துக்கோ. அவரு உனக்கு உதவியா இருக்கப்போறாரு, முகுந்தன் உனக்கு உதவியா இருக்கப் போறாரு. இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லைன்னா! (இடைவெளி விடுகிறார்) விருப்பம் இல்லைன்னா அவ்வளவு தான். வேற என்ன சொல்ல முடியும்.
முகுந்தன் தலைவர், நான் சொல்றத தான் கேக்கனும், நான் ஆரம்பிச்ச கட்சி நான் சொல்றதை தான் செய்யணும் எல்லோரும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளுங்கள். யாராக இருந்தாலும். விருப்பம் இல்லாதவர்கள் என் பேச்சைக் கேட்காதவர்கள் விலகிக் கொள்ளலாம்.
யார் இந்த முகுந்தன்?: பாமக புத்தாண்டு பொதுக்குழுவில் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். பாமக நிறுவனர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி - டாக்டர் பரசுராமன் தம்பதியின் மகன் தான் முகுந்தன்.
முன்னதாக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் இளைஞரணி தலைவர் பதவியிலின் இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்குமரன் பதவி விலகிய நிலையில், கட்சியின் இளைஞரணி புதிய தலைவர் முகுந்தன் என ராமதாஸ் அறிவித்ததால் அன்புமணி- ராமதாஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
ராமதாசின் சர்வாதிகாரம்: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பாமகவில் வெடித்துள்ள உட்கட்சி மோதல் அக்கட்சிக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஈடிவி பாரத்திடம் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா கூறுகையில், " 'பாமக மற்ற கட்சிகளை போல இல்லாமல் மாறுபட்ட கட்சி' என ராமதாஸ் கூறியிருந்தார். அந்த மாறுபாட்டைதான் இன்று நாம் பார்த்தோம். எந்த கட்சியிலும் வெளிப்படையாக தலைமை மோதல் இருக்காது; அதுவும் தந்தை - மகன் இடையே இருக்காது. திமுகவில் ஸ்டாலின், அழகிரி மோதலும் சரி செய்து கொண்டுவரப்பட்டது
பாமகவில் அப்பா - மகன் அதிகார மோதல் வீட்டில் பேசி தீர்த்துகொண்டிருக்க வேண்டும். பொதுவெளியில் பேசுவது பாமகவின் எதிர்காலத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். இது ஒரு அரசியல் கட்சிக்கு ஆரோக்கியமானதாக இருக்காது. ராமதாஸ் ஆதரவாளர்- அன்புமணி ஆதரவாளர் என கட்சிக்குள்ளேயே பிரிந்துவிடுவார்கள். கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகள் பேசுவது என்றால் யாரிடம் பேசுவது என்ற நிலை வந்துவிடும்.
அன்புமணி தலைவராக மாற்றிய பின் அவரே கட்சியை முழுமையாக பார்த்துக்கொள்வதாக கூறியதை ராமதாஸ் ஏற்கவில்லை. ராமதாஸ் தன்னுடைய வழிகாட்டுதல் இருக்க வேண்டும் என விரும்புகிறார். பாமகவில் 80% பேர் ராமதாஸுக்காக தான் கட்சியில் இருக்கின்றனர். ராமதாஸ் மகன் என்பதற்காக தான் அன்புமணிக்கு ஆதரவு உள்ளது. இந்த பிரச்சனைக்கு பிறகு அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் ஆதரவாளர்கள் செயல்பட்டால் கட்சி மோசமான சூழலுக்கு போய்விடும்.
2026 ஆண்டு தேர்தலுக்கு எல்லாரும் கூட்டணிக்காக பேசிவருகிறார்கள். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு போக வேண்டும் என ராமதாஸ் விரும்பினார். அவரை கட்டாயப்படுத்தி பாஜக கூட்டணிக்கு அன்புமணி அழைத்து சென்றார். இதேபோல் மாநில மாவட்ட அளவில் பொறுப்புகள் போடுவதிலும் தந்தை -மகன் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இந்த முரண்பாடு இன்று பொதுவெளியில் வெடித்துள்ளது.
இனி இளைஞர் கையில் என கட்சி கொடுத்துவிட்ட பிறகு நான் சொல்வதை தான் கேட்க்க வேண்டும் என ராமதாஸ் கூறுவது சர்வாதிகாரத்தை தான் காண்பிக்கிறது. தந்தை - மகன் இருவரும் தனிப்பட்ட முறையில் பேசி பொறுப்பை அறிவித்திருக்க வேண்டும். இதே பிரச்சனை தொடர்ந்து நீடித்தால் கட்சி பலவீனம் ஆகிவிடும். குடும்பத்தினர் பேசி இந்த குழப்ப நிலைக்கு ஒரிரு நாளில் நல்ல தீர்வு கிடைத்துவிடும்" என்றார் துரை கருணா.