திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான தங்கும் விடுதிகள், குடியிருப்புகள், பண்ணை வீடுகள் உள்ளன. வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பண்ணை வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கமாகும். .
இந்நிலையில் கிரிவலப் பாதையில் உள்ள பண்ணை வீடு ஒன்றை சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நான்கு பேர் ஆன்லைன் மூலம் கடந்த 26 ஆம் தேதி முன்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் நேற்று மதியம் ஒரு மணி அளவில் பண்ணை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் தங்கி இருந்த அறையின் கதவு திறக்கப்படாததால் அங்கு உள்ள ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக தட்டப்பட்ட நிலையில் கதவு திறக்கப்படாததால் முன்பதிவு செய்யப்பட்டபோது அவர்கள் கொடுத்திருந்த செல்ஃபோன் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளனர்.
செல்போன் அடித்தபடியே இருந்துள்ளது. யாரும் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது நான்கு பேரும் சலனம் இன்றி கிடந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பண்ணை வீட்டினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நால்வரும் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீசார், “பண்ணை வீட்டில் நால்வரும் தங்கியிருந்த அறையை உடைத்து உள்ளே சென்றோம். அங்கு இருந்த நால்வரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். அவர்கள் ருக்மணி பிரியா (45), மகாகால வியாசர் (55), முகுந்த் ஆகாஷ் குமார் (17), ஜலந்தரி (20) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. நால்வரும் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், சென்னையில் வசித்து வந்துள்ளனர். சென்னையில் இருந்துதான் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர்.
நான்கு பேர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். .
அவர்கள் தங்கியிருந்த அறையில் ஒரு கடிதம், ஒரு வீடியோவை கைப்பற்றினோம். அதில் உள்ள தகவலின்படி திருவண்ணாமலையில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்ற ஆன்மீகப் பற்று காரணமாக நால்வரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருக்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றோம். அவர்களது உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரணை நடைபெறும்,” என்று போலீசார் கூறினர்.
தற்கொலை தடுப்பு உதவி எண்: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தினாலோ தற்கொலை எண்ணம் தோன்றினால் ஆலோசனை பெற மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் 104 அல்லது சிநேகா தன்னார்வ மையத்தின் உதவி எண்களை அழையுங்கள்.
சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண்; 044 24640050
மின்னஞ்சல் வழி தொடர்புக்கு; help@snehaindia.org